இலங்கைக்கு தமிழக அரசு அரிசி உதவி – அரசாணைக்கு தடை விதிக்கக்கோரிய வழக்கு வாபஸ்

பொருளாதார நெருக்கடியில் உள்ள இலங்கைக்கு தமிழக அரசின் சார்பில் வழங்குவதற்காக 40 ஆயிரம் மெட்ரிக் டன் அரிசி கொள்முதல் செய்ய ஒப்புதல் அளித்த அரசாணைக்கு தடை விதிக்கக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு வாபஸ் பெறப்பட்டுள்ளது.
பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கை மக்களுக்கு வழங்குவதற்காக 40 ஆயிரம் டன் அரிசி கொள்முதல் செய்ய தமிழக அரசு முடிவெடுத்துள்ளதாக சட்டமன்றத்தில் முதலமைச்சர் அறிவித்தார். இந்த அரிசி அதிகவிலைக்கு வாங்கப்படுவதாகக் கூறி, திருவாரூர் மாவட்டம், திருக்கண்ணமங்கை கிராமத்தைச் சேர்ந்த ஜெயசங்கர் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், ஒரு கிலோ அரிசி 33 ரூபாய் 50 காசுகளுக்கு என்ற அடிப்படையில் 40 ஆயிரம் மெட்ரிக் டன் அரிசி கொள்முதல் செய்ய 134 கோடி ரூபாயை ஒதுக்கி அரசு அரசாணை பிறப்பித்துள்ளது எனத் தெரிவித்துள்ளார்.
இந்திய உணவு கழகம் ஒரு கிலோ அரிசியை 20 ரூபாய் என்ற விலையில் விற்பனை செய்வதாகவும், அதில் இருந்து அரிசி கொள்முதல் செய்யும் பட்சத்தில் 54 கோடி ரூபாய் தமிழக அரசுக்கு மிச்சமாகும் எனவும் குறிப்பிட்டுள்ளார். இது சம்பந்தமாக சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியபோது, இந்திய உணவு கழக அரிசி தரமற்றது எனவும், அரிசி கொள்முதல் செய்வது தொடர்பான தகவல்களை பரப்புவோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் மனுவில் குறிப்பிட்டுள்ளார். மேலும் டெண்டர் வெளிப்படைத்தன்மை சட்டத்தை பின்பற்றாமல், அதிக விலைக்கு அரிசி கொள்முதல் செய்வது குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை விசாரிக்க உத்தரவிட வேண்டும் எனவும், அரிசி கொள்முதலுக்கு ஒப்புதல் அளித்து பிறப்பித்த அரசாணைக்கு தடை விதிக்கவேண்டும் எனவும் மனுவில் கோரப்பட்டுள்ளது.
image
இந்த வழக்கு தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி, நீதிபதி என்.மாலா அகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதரார் தரப்பில் தான் ஒரு விவசாயி எனவும், அதிக விலைக்கு அரசி கொள்முதல் செய்வதால் அரசுக்கு இழப்பு ஏற்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டது. அப்போது நீதிபதிகள், நீங்கள் எந்த அடிப்படையில் வழக்கு தொடர்ந்து உள்ளீர்கள், அதிக விலைக்கு கொள்முதல் செய்தால் விவசாயிகளுக்கு நல்ல விலை கிடைக்குமே என தெரிவித்தனர். மனுதரார் விவசாயம் தவிர வேறு என்ன தொழில் செய்கின்றார் என நீதிபதிகள் கேள்வி எழுப்பினார். அப்போது மனுதரார் தரப்பில் அரசி வாங்கித் தரும் இடைத் தரகராக உள்ளதாக தெரிவித்தார்.
இதனையடுத்து நீதிபதிகள், அரசின் சார்பாக 2 ரூபாய்க்கு ஒரு கிலோ அரசி வழங்குவதால் இழப்பு ஏற்படும் என ஏன் வழக்கு தொடரவில்லை என கேள்வி எழுப்பினர். இந்த மனுவை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய உள்ளதாக நீதிபதிகள் எச்சரித்தனர். இதையடுத்து மனுவை திரும்பப் பெறுவதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது . இதையேற்று திரும்ப பெற அனுமதித்த நீதிபதிகள் வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.