புடவையில் தீப்பிடித்து புதுப்பெண் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கல்குளம் கிராமத்தில் துளசிமணி என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு முருகேஸ்வரி (வயது 23) என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இந்த நிலையில் முருகேஸ்வரி கடந்த மாதம் 24-ஆம் தேதி கேஸ் அடுப்பைப் பற்றவைத்து பால் காய்ச்சிக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக முருகேஸ்வரியின் புடவையில் தீப்பிடித்து உடலில் வேகமாக பரவியது.
அவரது அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் முருகேஸ்வரியை மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி முருகேஸ்வரி நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.