தெலுங்கில் பிசியான தமிழ் நடிகர்
பொதுவாக தமிழ் சினிமாவில் போதிய வாய்ப்புகள் இன்றி தெலுங்கிற்கு சென்று முன்னணி நடிகை ஆனவர்கள் இருக்கிறார்கள். சமந்தா, அனுஷ்கா, ரகுல் ப்ரீத்தி சிங், சாய் பல்லவி இப்படி பலரை சொல்லலாம். இதேபோன்று இங்கு சரியான வாய்ப்புகள் இல்லாமல் தெலுங்கிற்கு சென்று முன்னணி நடிகர் ஆகியிருக்கிறார் ஆதித்.
தமிழ் சினிமாவில் இனிது இனிது படம் மூலமாக நடிகராக அறிமுகமானவர் ஆதித், தொடர்ந்து தமிழில் பல படங்களில் நடித்தவர் தெலுங்கு திரையுலகில் “கதா” திரைப்படம் மூலம் அறிமுகமானார். தொடர்ந்து தெலுங்கு படங்கள் அவருக்கு நல்ல வரவேற்பை பெற்று தந்தன. வரிசையாக படங்கள் தொடர்ந்து வந்ததில் ஐதராபாத்தில் செட்டில் ஆகிவிட்டார் ஆதித்.
தெலுங்கில் இவர் நடித்த 24 கிஸ்ஸஸ், சிக்காடி காடிலோ சித்தகொதுடு, டியர் மேகா உள்ளிட்ட படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன. தனது பெயரையும் திரிகுன் என மாற்றிவிட்டார். சமீபத்தில் இவர் பிறந்த நாளை முன்னிட்டு ஒரே நேரத்தில் இவர் நடிக்கும் நான்கு படங்களின் போஸ்டர்கள் வெளியிடப்பட்டன. ராம்கோபால் வர்மா இயக்கும் கொண்டா படத்திலும் இவர் தான் ஹீரோ.
“தமிழ் சினிமாவை விட்டு தெலுங்கு சினிமா பக்கம் சென்றாலும் தமிழ் சினிமாதான் என் தாய்வீடு, தமிழ் இளைஞனாக தமிழ் சினிமாவில் நமக்கென ஒரு இடத்தை தக்கவைத்துக் கொள்ளவே எனக்கு விருப்பம். தற்பொழுது அது நிறைவேறும் விதமாக முன்னணி இயக்குனர்களோடு கைகோர்க்கிறேன் என்கிறார் ஆதித் என்கிற திரிகுன்.