மகாபலிபுரத்தில் வெகு விமரிசையாக நடந்து முடிந்த நயன்தாரா – விக்னேஷ் சிவன் திருமணத்தில் பல்வேறு பிரபலங்கள் கலந்துகொண்டனர். இந்நிலையில் திருமணத்துக்கு விக்னேஷ் சிவன் தங்களை அழைக்காதது வேதனை அளிக்கிறது, குடும்ப உறவினர்கள் யாரையும் கலந்து ஆலோசிக்காமல் திருமணம் நடைபெற்றது, இது குடும்பத்துக்கு மிகுந்த மன உளைச்சலையும், வருத்தத்தையும் ஏற்படுத்துகிறது என அவரின் பெரியப்பா பேட்டியளித்திருந்தார்.
பிரபலங்கள் என்பதால் இந்த விஷயம் தற்போது பேசுபொருளாகியிருக்கிறது. ஆனால் பெரும்பாலும் பல வீடுகளிலும் சுப நிகழ்ச்சியென்றாலும் துக்க நிகழ்ச்சியென்றாலும் தங்களுக்கு தகவல் தெரிவிக்கப்படவில்லை என்று யாராவது குடும்ப உறுப்பினர்களோ நெருங்கிய நண்பர்களோ புலம்புவதைக் கேட்டிருப்போம்.
இதுபோன்ற நிகழ்வுகளால் சண்டை, சச்சரவு நடைபெறுவது ஒரு பக்கம் இருந்தாலும், மனதுக்குள் வெதும்பிக்கொண்டே பலர் துயரத்தோடு இருப்பார்கள். இதுபோன்ற நிலையை எப்படிக் கையாள்வது என்று ஆலோசனை வழங்குகிறார் சென்னையைச் சேர்ந்த உளவியல் ஆலோசகர் சரஸ்பாஸ்கர்.
“நெருங்கிய உறவான ஒருவர் தன்னைத் திருமணத்துக்கு அழைக்கவில்லை என்றால் மனவருத்தம், அதிர்ச்சி, கோபம், ஏமாற்றங்கள் வருவது இயல்புதான். அந்த உணர்வுகள் எல்லாம் நியாயமாகக்கூட இருக்கலாம். அதே சமயம், அவர்கள் அழைக்காமல் இருப்பதற்கு அவர்கள் தரப்பில் ஆயிரம் காரணங்கள் இருக்கலாம். இதைப்பற்றி மற்றவர்களிடம் புலம்பும்போதோ, வருத்தப்படும்போதோ அந்தப் பிரச்னை இன்னும் அதிகம்தான் ஆகும்.
இதனால் ஒருவர் அழைக்காதது பற்றி வருத்தப்படுவது தவறு என்று சொல்ல முடியாது. ஆனால் ‘வருத்தப்படாதீர்கள்! இதுபோன்ற விஷயத்தால் உங்கள் எண்ணங்களை நெகட்டிவ்வாக மாற்றும்போது, உங்களுக்குத்தான் உடல், மனம் சார்ந்த பிரச்னைகள் வரும்’ என்று சொல்லிப் புரியவைக்க முடியும்.
சமூகத்தில் நிறைய மாற்றங்கள் வந்துள்ளன. கூட்டுக் குடும்பங்கள் என்னும் அமைப்பு மாறி தனிக்குடும்பங்கள் எனும் அமைப்பும், திருமணத்துக்குப் பின் சேர்ந்து வாழ்தல் என்பது இப்போது ‘லிவிங் டுகெதர்’ வாழ்க்கை முறை வரை மாறி உள்ளது. இதுபோன்று, ஒவ்வொரு காலகட்டத்திலும் நிறைய மாற்றங்கள் வருகின்றன.
இந்த ‘மாற்றம் மட்டும் தான் மாறாதது’. அதே சமயத்தில், சமூகத்தில் வாழக்கூடிய மக்களாகிய நாம் அதை எவ்வாறு ஏற்றுக்கொள்கிறோம் என்பதில் நம் மனவலிமை வெளிப்படும். உறவுகள் மாறியுள்ள சூழலில், நாமும் நம் எதிர்பார்ப்புகளில் சில மாற்றங்களைச் செய்துகொள்ள வேண்டும் என்றே கருதுகிறேன். திருமண நாளன்று திருமண தம்பதிகள்தான் ஹீரோ ஹீரோயின்.
அன்றைய தினத்தன்று போய், ‘என்னை அழைக்கவில்லை, எனக்குத் தர வேண்டிய மரியாதையைத் தரவில்லை, தனக்கு முக்கியத்துவம் தர வேண்டும்’ என்பதெல்லாம் அவர்களின் பொன்னான நேரத்தை நாம் கடன் கேட்பது போல் ஆகும்.
திருமணத்துக்கு அழைக்கவில்லை, சிறு ஏமாற்றம் இருக்கிறது, எங்கு இருந்தாலும் வாழ்க’ என்று வாழ்த்திவிட்டு கடந்த செல்வதில்தான் விவேகம் உள்ளது. அவர்களைத் தனியாகக் கூப்பிட்டு வாழ்த்தலாம், விருந்தளிக்கலாம், பரிசுகள்கொடுக்கலாம்.
இப்படிதான் நமது முதிர்ச்சியை, பக்குவத்தை வெளிப்படுத்த வேண்டும். அன்றைய காலத்தில் கல்யாணம் என்பது பலநாள் கொண்டாட்டமாக இருக்கும். இன்றைய இளைஞர்களோ தன் வயதையொத்தவர்களிடம் சேர்ந்து சந்தோஷமாக இருக்க வேண்டு என்று விரும்புகின்றனர். வீட்டில் குடும்ப உறுப்பினர்களுடன் இருக்கும்போது தங்களுக்கு சில கட்டுப்பாடுகள் இருப்பதாகவும் எண்ணுகின்றனர். இதை உறவுகள் புரிந்துகொள்ள வேண்டும்.
குடும்ப அமைப்பு பற்றியும், கல்யாணத்தைப் பற்றியும், வேறுபட்ட கருத்துகள் உள்ளன. உறவு என்று வரும்போது முந்தைய தலைமுறையின் பாரம்பர்யங்களையும், விழுமியங்களையும் இன்றளவும் பின்பற்ற வேண்டும் என்பது பரந்த சமூகத்தில் ஒரு கட்டத்துக்குள் இருப்பது போன்றது. இந்தக் கட்டத்தைத் தாண்டி வரவில்லை என்றால் அவதிப்படுவது நாமாகத்தான் இருப்போம்” என்றார்.