“சுயாட்சி பேசும் ஸ்டாலின் புதுச்சேரி நிர்வாகத்தில் ஏன் தலையிடுகிறார்?!" – கேள்வி எழுப்பும் அதிமுக

புதுச்சேரி கிழக்கு மாநில அ.தி.மு.க செயலாளர் அன்பழகன் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “கடந்த வாரத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள், தமிழகத்தில் மக்களுக்கு தீர்வு காண வேண்டிய பல்வேறு பிரச்னைகள் இருக்கும்போது, கார்ப்பரேட் நிறுவனத்தின் கார்டிலியர் குரூஸ் என்ற நிறுவனத்தின் சுற்றுலா சூதாட்ட கேளிக்கை சொகுசு கப்பலை சென்னை துறைமுகத்தில் தொடங்கி வைத்தார். துவக்க நிகழ்ச்சியின்போது சென்னை, விசாகப்பட்டினம், புதுச்சேரி ஆகிய இடங்களில் சுற்றுலா பயணிகளை ஏற்றி இறக்குவார்கள் என்று அறிவித்தார். தமிழ்நாடு முதல்வரின் இந்த அறிவிப்புக்கு புதுச்சேரி அ.தி.மு.க உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

முதல்வர் ஸ்டாலின்

இந்த சொகுசு கப்பலில் இளைஞர்களை சீரழிக்கும் சூதாட்டம் உள்ளிட்ட செயல்கள் நடைபெறுவதால் அதனை புதுச்சேரிக்கு அனுமதிக்க கூடாது எனவும், கப்பலில் புதுச்சேரியிலிருந்து பயணிகளை ஏற்றவோ, இறக்கவோ கூடாது என அரசுக்கு கோரிக்கை விடுத்தோம். இந்த கோரிக்கையை ஏற்று துணைநிலை ஆளுநர் இரண்டு நாள்களுக்கு முன்பு ஒரு அறிக்கை வெளியிட்டார். அதில் இந்த கேளிக்கை சொகுசு கப்பல் தொடர்பாக எங்களிடம் யாரும் எந்தவித அனுமதியும் கேட்கவில்லை. அப்படி அனுமதி கேட்டாலும் சூதாட்டம் நடைபெற்றால் நாங்கள் அனுமதி வழங்க மாட்டோம். கலாசார சீரழிவுக்கான எந்த நடவடிக்கைக்கும் அனுமதி கொடுக்க மாட்டோம் எனத் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் தமிழ்நாடு முதல்வரால் துவக்கி வைக்கப்பட்ட இந்த சூதாட்ட கேளிக்கை கப்பல் இன்று புதுச்சேரிக்கு வந்தது.

கப்பலில் இருந்து பயணிகளை இறக்கவோ, ஏற்றவோ எங்கள் கூட்டணியின் முதலமைச்சர் ரங்கசாமி அவர்கள் அனுமதி வழங்கவில்லை. இதன் காரணமாக ஒரு மணி நேரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கப்பல் திருப்பி அனுப்பப்பட்டது. இதற்கு துணைநிலை ஆளுநர், முதல்வர் ரங்கசாமிக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் புதுச்சேரி நிர்வாகத்தில் தேவையற்ற முறையில் குறுக்கீடு செய்வது தவறான ஒன்றாகும். தொடர்ந்து மாநில அந்தஸ்து, மாநில சுயாட்சி பற்றி பேசும் தி.மு.க தலைவர் ஸ்டாலின் ஏன் புதுச்சேரி நிர்வாகத்தில் தலையிட வேண்டிய அவசியம் என்ன? புதுச்சேரி சின்னஞ்சிறு மாநிலம் என்பதால் ஸ்டாலின் சொல்லும் அனைத்தையும் கேட்டுக் கொள்ள வேண்டிய அவசியமில்லை.

புதுச்சேரியில் சுற்றுலா என்ற பெயரில் கப்பல்கள் வருவதற்கு எந்தவித தடையும் இல்லை. ஆனால் சுற்றுலா என்ற பெயரில் இளைஞர்களை சீரழிக்கும் சூதாட்ட கேளிக்கை கப்பலுக்கு அ.தி.மு.க எப்போதும் எதிர்ப்பு தெரிவிக்கும். தற்போது தமிழ்நாட்டில் ஆட்சி செய்யும் விடியா தி.மு.க அரசு ஆன்லைன் ரம்மி சூதாட்டத்திற்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்து வருகிறது. ஆன்லைன் ரம்மி சூதாட்டத்திற்கு நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய இன்றுவரை தி.மு.க செல்லவில்லை. தமிழ்நாட்டில் தங்குதடையின்றி போதைப்பொருள் கிடைப்பது, கேசினோ சூதாட்டத்திற்கு அனுமதி அளிப்பது போன்ற செயல்களில் தி.மு.க ஈடுபட்டுள்ளது. ஒருவேளை நாளைய தினம் சொகுசு கப்பல் நிறுவனம் தனது அதிகாரத்தை பயன்படுத்தி புதுச்சேரி அரசை மிரட்டி அனுமதி பெற்றால், அ.தி.மு.க தலைமையின் அனுமதி பெற்று இதற்கு எதிரான முடிவை எடுப்போம் ” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.