ஜம்மு: வழிபாட்டு தலம் குறித்த சர்ச்சை வீடியோ வெளியான நிலையில், காஷ்மீரின் சில மாவட்டங்களில் ஊரடங்கு, இணையதள சேவை இன்று முடக்கப்பட்டது. காஷ்மீரில் சமீப நாட்களாக இந்துக்கள், காஷ்மீரி பண்டிட்டுகள் மீது தீவிரவாதிகளின் தொடர் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதனால், காஷ்மீரி பண்டிட்டுகள் மற்றும் அலுவலர்கள் தங்களை பணி இடமாற்றம் செய்ய வலியுறுத்தி தொடர்ந்து போராட்டத்திலும் ஈடுபட்டு வருகின்றனர். காஷ்மீரின் தோடா மாவட்டம் பதர்வா நகரில் உள்ள வழிபாட்டு தலத்தில் மோதலை தூண்டிவிடும் வகையிலான அறிவிப்பு அடங்கிய வீடியோ ஒன்று வெளியானது. இந்த வீடியோ தொடர்பாக பதர்வா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். அங்கு பதற்றம் நிலவி வரும் நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கிஷ்த்வார் மற்றும் ராம்பன் மாவட்டங்களில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இன்டர்நெட் சேவையும் முடக்கப்பட்டு உள்ளது. காஷ்மீரின் உதம்பூர் மக்களவை தொகுதி எம்பியான ஒன்றிய அமைச்சர் ஜிதேந்தர் சிங், மக்கள் அமைதியை கடைப்பிடிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து மேலும் அவர் கூறுகையில், ‘நிலைமையை தொடர்ந்து கண்காணிக்க அதிகாரிகளை அறிவுறுத்தி உள்ளேன். தோடா மாவட்ட கலெக்டர் மற்றும் மூத்த போலீஸ் எஸ்பி ஆகியோரும் பதர்வாவில் முகாமிட்டு நிலைமையை கண்காணித்து வருகின்றனர்’ என்று கூறினார்.