திருவலம்: திருவலம் ெபான்னையாற்று இரும்பு பாலத்தில் சீரமைப்பு பணிகள் நிறைவடைந்ததையொட்டி, இன்று முதல் போக்குவரத்திற்கு திறக்கப்பட்டது.வேலூர் மாவட்டம் திருவலம் பொன்னையாற்றின் குறுக்கே இரும்பு பாலம் உள்ளது. இதில் விரிசல் ஏற்பட்டு அதிலிருந்த கான்கிரீட் சிமெண்ட், ஜல்லி கலவைகள் பெயர்ந்து கம்பிகள் வெளியே தெரிந்து ஆபத்தான நிலையில் மாறியது. இதனால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர். இதையடுத்து, சம்பந்தப்பட்ட நெடுஞ்சாலைதுறையினர் பாலத்தில் உள்ள சாலையின் இணைப்பு பகுதிகளில் ஏற்பட்டிருந்த விரிசல்களுக்கு தார் கலவை பூசி தற்காலிகமாக சீரமைத்தனர். தொடர்ந்து, விரிசல்களை நிரந்தரமாக சீரமைக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து, நெடுஞ்சாலைதுறையினர் தனியார் ஒப்பந்ததாரர் மூலம் சீரமைக்கும் பணிகளை கடந்த ஏப்ரல் மாதம் 27ம்தேதி தொடங்கினர். அன்றுமுதல் பாலத்தில் போக்குவரத்து தடைசெய்யப்பட்டது. இதனால் வாகனங்கள் பொன்னையாற்று புறவழிச்சாலை பாலத்தின் வழியாக சென்றுவந்தன. இந்நிலையில் மேம்பாலம் சீரமைப்பு பணி கடந்த மே மாதம் 27ம்தேதி நிறைவடைந்தது. தொடர்ந்து, பாலத்தின் சாலையில் இருந்த 36 சிறுவிரிசல்களுக்கு தார்பூசி சீரமைக்கும் பணிகள் நடந்தது. இப்பணிகள் நேற்றுடன் நிறைவடைந்தது. இதையடுத்து வேலூர் மாவட்ட நெடுஞ்சாலைத்துறையின் காட்பாடி உதவி கோட்டப்பொறியாளர் சுகந்தி தலைமையில் நெடுஞ்சாலை துறையினர் நேற்று ஆய்வு செய்தனர். இதையடுத்து இன்று காலை பூஜை செய்து பாலத்தை திறந்து வைத்தனர். சுமார் ஒன்றரை மாத இடைவெளிக்கு பிறகு பாலம் சீரமைப்பு பணி முடிந்து திறக்கப்பட்டதால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சியடைந்தனர்.