திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் பகுதியைச் சேர்ந்த 29 வயதானவர் வினீத் பாலாஜி. நீலகிரி மாவட்டம், ஊட்டியில் உள்ள ஜி-1 காவல் நிலையத்தில் காவலராக இவர் பணியாற்றி வருகிறார். திண்டுக்கல் மாவட்டம், சீலப்பாடி, பகுதியைச் சேர்ந்த 25 வயதான முத்து பாண்டீஸ்வரி என்ற பெண்ணை கடந்த ஆண்டு ஜூன் மாதம் திருமணம் செய்திருக்கிறார். இருவரும் ஊட்டி ஜெயில் ஹில் காவலர் குடியிருப்பில் வசித்து வந்திருக்கின்றனர். இந்த நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமையன்று காவலர் குடியிருப்பில் முத்து பாண்டீஸ்வரியின் உடல் தூக்கில் தொங்கியபடி சடலமாக மீட்கப்பட்டது.
தகவல் அறிந்த ஜி-1 காவல்துறையினர், உடலைக் கைப்பற்றி உடற்கூறாய்வுக்கு ஊட்டி அரசு மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த மரணம் தொடர்பாக வழக்கு பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். முத்து பாண்டீஸ்வரியின் இறப்புக்கு வரதட்சணைக் கொடுமையே காரணம் என முதற்கட்ட விசாரணையில் காவல்துறையினர் கண்டறிந்தனர்.
இந்த நிலையில், “காவலர் வினீத் பாலாஜியும், அவர் பெற்றோரும் என் மகளிடம் வரதட்சணைக் கேட்டு கொடுமைப்படுத்தியதாலேயே அவர் இறந்து விட்டார். மகளின் மரணத்தில் மர்மம் இருப்பதால் உரிய விசாரணை நடத்த வேண்டும்!” என முத்து பாண்டீஸ்வரியின் தந்தை கார்த்திகைவேல் ஊட்டி ஜி-1 காவல் நிலையம் மற்றும் ஊட்டி வருவாய் கோட்டாட்சியரிடம் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் வினீத் பாலாஜி, அவர் தந்தை ராதாகிருஷ்ணன், தாய் கவிதா ஆகிய மூன்று பேரிடமும் விசாரணை நடத்தியிருக்கின்றனர். மூன்று பேருமே முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்திருக்கின்றனர். சந்தேகமடைந்த காவல்துறையினர் 3 பேரையும் கைதுசெய்து தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
முத்து பாண்டீஸ்வரிக்கு நடந்த வரதட்சணைக் கொடுமைக் குறித்து பேசிய அவர் பெற்றோர், “திருமண பேச்சுவார்த்தை நடந்த போதே வினீத் பாலாஜி வீட்டுல 18 பவுன் தங்க நகை, மரக்கட்டில், வாசிங் மிஷின் அப்புறம் ரூ.50 ஆயிரம் ரொக்கப் பணம் கேட்டாங்க. அவங்க கேட்ட எல்லாத்தையும் கொடுத்துட்டோம் . ஆனால், ரொக்கப் பணத்துல மட்டும் 20 ஆயிரம் ரூபாய்தான் கொடுக்க முடிஞ்சது. மீதிப் பணத்தை அப்புறம் கொடுக்குறோம்னு சொன்னோம். கல்யாணம் முடிஞ்சுதுல இருந்தே எங்க மகள்கிட்ட வரதட்சணைக் கேட்டு கொடுமைப்படுத்தியிருக்காங்க. அரசாங்க உத்தியோக மாப்பிள்ளை தானே’னு மேலும் கூடுதலா 10 பவுன் தங்கமும் புல்லட் பைக்கும் கேட்டாங்க.
ரெண்டாவது மகளுக்கு கல்யாண ஏற்பாடு நடக்குது இப்போதைக்கு கையில பணம் இல்லைன்னு சொன்னோம். அதுக்கு அவங்க ஒத்துக்கல. ரெண்டாவது மகள் கல்யாணத்துக்கு வரலை. என்னுடைய மகளை மட்டும் தனியா அனுப்பி வச்சாங்க. பணம், நகை கொடுக்கலைன்னு ஊட்டியில் வச்சி தினமும் கொடுமைப்படுத்துறாங்கன்னு மகள் அடிக்கடி சொல்லியிருக்கா.
வீட்டுக்காரர், மாமனார், மாமியார் மூணு பேரும் அவளை ரொம்ப கேவலமா பேசுவதா போன்ல சொல்லியிருக்கா. அடிச்சும் கொடுமைப்படுத்தியிருக்காங்க. இங்க வாழவேப் பிடிக்கலன்னு 6-ம் தேதி சொன்னா. ஊட்டிக்கு நேர்ல வந்து சமாதானம் செய்யிறோம்னு சொன்னோம். உங்க பொண்ணு செத்துட்டான்னு திடீரென ஊட்டி எஸ்.பி ஆபீஸ்ல இருந்து 7-ம் தேதி போன் வருது. நாங்க எப்படி தாங்குவோம் சொல்லுங்க. எங்களுக்கு நியாயம் கிடைக்கணும்” என கண்ணீர் வடிக்கின்றனர்.