மதுரை: உசிலம்பட்டி அருகே ஹெலிகாப்டர் மூலம் மலர் தூவி கோயில் கும்பாபிஷேகம் விழா கோலாகலமாக நடந்தது.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே வாலாந்தூர் கிராமத்தில் உள்ள அங்காளஈஸ்வரி கோயில் சிறப்பு வாய்ந்தது. இந்தக் கோயிலை புனரமைப்பு செய்து, 101 அடி கோபுரம் கட்டப்பட்டு கோயிலின் குடமுழுக்கு விழா இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது.
கடந்த மூன்று நாட்களாக சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க சிறப்பு பூஜைகள் ஹோமங்கள் செய்து 101 அடி கோபுரத்தில் உள்ள கலசத்தில் புனித நீர் ஊற்றினர்.
அதேநேரம் ஹெலிகாப்டர் மூலம் மலர் தூவும் கும்பாபிஷேகம் நடந்தது. கும்பாபிஷேகத்திற்கு வந்திருந்த பக்தர்கள், கும்பாபிஷேக நிகழ்வையும், ஹெலிகாப்டர் மூலம் மலர் தூவும் நிகழ்வையும் ஒரே நேரத்தில் கண்டு பிரமித்தனர்.
இந்த குடமுழுக்கு விழாவைக் காண மதுரை, தேனி , திண்டுக்கல் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்திருந்தனர். இந்தநிகழ்வில் கோயில் நிர்வாக கமிட்டியினரால் 10 ஆயிரம் பேருக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.
ஹெலிகாப்டர் மூலம் மலர் தூவப்பட்ட நிகழ்வால் வாலந்தூர் கிராம அங்காளஈஸ்வரி கோயில் கும்பாபிஷேகம் முக்கியத்துவம் பெற்றது.