மட்டக்களப்பு மாவட்டத்தில் சேதனைப் பசளையினை நம்பி சுமார் 80 ஆயிரம் ஏக்கரில் சிறுபோக வேளாண்மை செய்கை பண்ணப்பட்டிருப்பதாக அகில இலங்கை விவசாய சம்மேளனத்தின் மட்டக்களப்பு மாவட்ட தலைவர் கே.யோகவேள் தெரிவித்தார்.
சேதனப் பசளையை நம்பி செய்கை பண்ணப்பட்டுள்ள சிறுபோக வேளாண்மை நல்ல விளைச்சலைத் தந்துள்ளதாகவும் இரசாயன உரம் கிடைக்கும் பட்சத்தில் மேலும் நல்ல அறுவடையை எதிர்பார்க்க முடியுமெனவும் அவர் தெரிவித்தார்.
அகில இலங்கை விவசாய சம்மேளனம் அண்மையில் விவாசாய அமைச்சர் மஹிந்த அமரவீரவுடன் நடாத்திய பேச்சு வார்த்தையின்போது இம்மாத இறுதிக்குள் இந்தியாவிலிருந்து இரசாயன பசளையை இறக்குமதி செய்து தருவதாகவும் உறுதியளித்ததாக அவர் மேலும் தெரிவித்தார்.
சேதனப் பசளை மூலம் செய்கை பண்ணப்பட்ட வேளாண்மையை அறுவடை செய்யும்போது ஒரு ஏக்கருக்கு 10 மூடை அறுவடையை எதிர்பார்த்தால் இரசாயன பசளை மூலம் செய்கை பண்ணப்படும் நெற்செய்கைக்கு ஒரு ஏக்கருக்கு 35 மூடைகளை அறுவடையாக எதிர்பார்க்க முடியும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.