புதுடில்லி :பா.ஜ., செய்தி தொடர்பாளராக இருந்த நுாபுர் சர்மா, முஸ்லிம் மதத்தை விமர்சித்ததை கண்டித்து, இந்தியாவின் முக்கிய நகரங்களில் தற்கொலைப்படை தாக்குதல் நடத்துவோம் என, அல் – குவைதா பயங்கரவாத அமைப்பு மிரட்டல் விடுத்துள்ளதையடுத்து, நாடு முழுதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. கண்காணிப்பை அதிகரித்து விழிப்புடன் இருக்குமாறு, மாநில அரசுகளை மத்திய உள்துறை அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது.
பா.ஜ., செய்தித் தொடர்பாளராக இருந்த நுாபுர் சர்மா, சமீபத்தில் ‘டிவி’ நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார். அப்போது, அவர் முஸ்லிம் மதத்திற்கு எதிராக சர்ச்சை கருத்தை வெளியிட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து, அவர் கட்சியில் இருந்து ‘சஸ்பெண்ட்’ செய்யப்பட்டார். இந்த சர்ச்சை பேச்சுக்கு, முஸ்லிம் நாடுகள் பலவும் கண்டனம் தெரிவித்துள்ளன.
பெரும் பரபரப்பு
இந்நிலையில், நுாபுர் சர்மாவின் பேச்சைக் கண்டித்து, இந்தியாவின் முக்கிய நகரங்களில் தற்கொலைப் படை தாக்குதல் நடத்த உள்ளதாக, அல் – குவைதா பயங்கரவாத அமைப்பு மிரட்டல் விடுத்திருந்தது. இந்த அமைப்பின் இணையதளத்தில் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:டில்லி, மும்பை, உத்தர பிரதேசம், குஜராத் ஆகிய இடங்களில் தற்கொலைப் படை தாக்குதல் நடத்தப்படும். ஹிந்து பயங்கரவாதிகளுக்கு முடிவு கட்டப்படும். அவர்கள் தங்கள் வீடுகளிலோ அல்லது ராணுவ முகாம்களிலோ அகதிகளாக தங்கியிருக்க வேண்டியது தான்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இது, நம் நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இந்தியாவுக்கு எதிராக அல் – குவைதா, தற்போது தான் பகிரங்கமாக மிரட்டல் விடுத்துள்ளது. இது குறித்து, உளவுத்துறை வட்டாரங்கள் தெரிவித்ததாவது:இந்த மிரட்டல், அல் – குவைதாவின் இணையதளத்தில் விடுக்கப்பட்டிருக்கிறது. இந்த இணையதளம் எங்கிருந்து செயல்படுகிறது என்பதை ஆய்வு செய்து வருகிறோம். ஆப்கானிஸ்தான், ஈரான், ஆப்ரிக்காவிலிருந்து செயல்படலாம் என சந்தேகிக்கிறோம். பாகிஸ்தானில் இருந்து செயல்படுவதற்கான வாய்ப்பும் உள்ளது. இந்தியாவில் அல் – குவைதா நேரடியாக செயல்படாமல், ஜம்மு – காஷ்மீரில் ‘அன்சர்கஜ்வத் உல் ஹிந்த், ஜாகிர் மூசா’ என்ற பெயர்களில் பயங்கரவாத அமைப்பாக செயல்படுகிறது.
ஆர்ப்பாட்டம்
இந்த அமைப்புகளைச் சேர்ந்த பயங்கரவாதிகளை பயன்படுத்தி, தாக்குதல் நடத்த அல் – குவைதா சதித் திட்டம் தீட்டியிருக்க வாய்ப்பு உள்ளது.இந்த அமைப்பு, முன்பு போல் வலுவாக இல்லை என்றாலும், மிரட்டலை அலட்சியப்படுத்தக் கூடாது என, மத்திய அரசை எச்சரித்துள்ளோம்.இவ்வாறு உளவுத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன. இதையடுத்து, நாடு முழுதும் பாதுகாப்பை பலப்படுத்த மத்திய உள்துறை அமைச்சகம்உத்தரவிட்டுள்ளது. மேலும், மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கண்காணிப்பை அதிகரித்து, விழிப்புடன் இருக்கும்படி மாநில அரசுகளை மத்திய உள்துறை அமைச்சகம் கேட்டுள்ளதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன. இதற்கிடையே, நுாபுர் சர்மாவை கைது செய்ய வலியுறுத்தி, நாடு முழுதும் முஸ்லிம் அமைப்புகள் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தின. உத்தர பிரதேசம், தெலுங்கானா, மஹாராஷ்டிரா, டில்லி, ஜார்க்கண்ட் உள்ளிட்ட சில மாநிலங்களில் வன்முறை வெடித்தது; கல் வீச்சுசம்பவங்களும் நடந்தன.
போலீசார், தடியடி நடத்தியும், கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் கூட்டத்தை கலைத்தனர். ஜம்மு – காஷ்மீர் யூனியன் பிரதேசம், தோடா மாவட்டம் பதேர்வா பகுதியில் நேற்று முன்தினம் மாலை, நுாபுர் சர்மாவை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது. அப்போது சிலர் ஹிந்து மதத்தையும், நுாபுர் சர்மாவையும் தரக்குறைவாக விமர்சித்து பேசினர்.இந்தப் பேச்சு, மசூதி ஒன்றில் ஒலிபெருக்கி வழியாக ஒலி
பரப்பப்பட்டதால், தோடா, கிஷிட்வார் மாவட்டங்களில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, இந்த மாவட்டங்கள் உட்பட சில பகுதிகளில் வன்முறை பரவாமல் தடுக்க, போலீசார் ௧௪௪ தடையுத்தரவுபிறப்பித்துள்ளனர்.வதந்திகள் பரவுவதை தடுக்க, யூனியன் பிரதேசத்தின் பல பகுதிகளில், ‘இன்டர்நெட்’ சேவையும், ‘மொபைல் இன்டர்நெட்’ சேவையும் முடக்கப்பட்டன. இதற்கிடையே, நுாபுர் சர்மாவை விமர்சித்ததை கண்டித்து, ஜம்மு – காஷ்மீரில் நேற்று கடைஅடைப்பு போராட்டம் நடத்த அழைப்பு விடுக்கப்பட்டது. இதனால், சில பகுதிகளில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.