வாஷிங்டன்:கோதுமை ஏற்றுமதிக்கு விதித்த தடையை இந்தியா தளர்த்தியுள்ளதை, சர்வதேச நிதியம் வரவேற்றுள்ளது.
ரஷ்யா, உக்ரைன் இடையிலான போரால், சர்வதேச சந்தையில் கோதுமை விலை அதிகரித்து உள்ளது. இதனால் உள்நாட்டில் கோதுமை விலை உயர்வை தடுக்க, அதன் ஏற்றுமதிக்கு மத்திய அரசு கடந்த மாதம் தடைவிதித்தது.இதையடுத்து, அமெரிக்கா, துருக்கி உள்ளிட்ட நாடுகள், ஐ.நா., மற்றும் சர்வதேச நிதியம் ஆகியவை கோதுமை ஏற்றுமதிக்கு விதித்த தடையை மறுபரிசீலனை செய்யும்படி இந்தியாவை கேட்டுக் கொண்டன.
இதை ஏற்று, கோதுமையை ஏற்றுமதிசெய்ய மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.இது குறித்து சர்வதேச நிதியத்தின் செய்தி தொடர்பாளர் கெர்ரி ரைஸ் கூறியதாவது:கோதுமை ஏற்றுமதிக்கான தடையை இந்தியா தளர்த்தியதை சர்வதேச நிதியம் வரவேற்கிறது. அதேசமயம், வேறு 30 நாடுகள் உணவுப் பொருட்கள், எரிபொருள்கள் ஆகியவற்றின் ஏற்றுமதிக்கு தடை விதித்துள்ளன.
இது மிகவும் கவலை அளிப்பதாக சர்வதேச நிதியத்தின் நிர்வாக இயக்குனர் கிறிஸ்டலினா ஜியார்ஜிவா,முதன்மை துணை நிர்வாக இயக்குனர் கீதா கோபிநாத் ஆகியோர் தெரிவித்து உள்ளனர். இந்தியா உட்பட அனைத்து நாடுகளும் உணவுப் பொருட்கள் ஏற்றுமதிக்கான தடையை மேலும் தளர்த்தும் என, எதிர்பார்க்கிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.
Advertisement