மும்பை: மும்பை உயர் நீதிமன்றத்தில் நேற்று முன்தினம் ஒரே நாளில் 200 வழக்குகளை விசாரித்த நீதிபதி ஷிண்டே அமர்வு சாதனை படைத்துள்ளது. மும்பை உயர்நீ திமன்றத்தில் நீதிபதி எஸ்எஸ் ஷிண்டே தலைமையிலான அமர்வு செயல்பட்டு வருகிறது. இதில், நீதிபதி எம்.என் ஜாதவும் இடம் பெற்றுள்ளார்.ய பரோல், குற்றவியல் தொடர்பான வழக்குகளை இந்த அமர்வு விசாரித்து வருகிறது. இந்நிலையில், நேற்று முன்தினம் ஒரே நாளில் வழக்கமான பணி நேரத்தை விட கூடுதலாக 5 மணி நேரம் பணியாற்றிய இந்த அமர்வு, 200 வழக்குகளை விசாரித்து சாதனை படைத்துள்ளது. நீதிபதி ஷிண்டேவின் இந்த முயற்சிக்கு, ஒன்றிய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ பாராட்டு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக டிவிட்டரில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், மும்பை உயர் நீதிமன்ற நீதிபதி ஷிண்டே தலைமையிலான அமர்வு நேற்று 190க்கும் மேற்பட்ட வழக்குகளை விசாரித்ததாக அறிகிறேன். இதற்காக காலை 10.30 மணிக்கு தொடங்கி இரவு 8 மணி வரை அவர் விசாரணை நடத்தியுள்ளார். அவருக்கு எனது பாராட்டுக்கள்,’ என கூறியுள்ளார். நேற்று முன்தினம் இந்த அமர்வு, 206 வழக்குகளை விசாரிக்க பட்டியலிட்டு இருந்தது. இந்த நீதிமன்றத்தில் வழக்கமான பணி நேரம் காலை 10.30 மணி முதல் மாலை 4.30 வரை. இந்த நேரத்தில் பட்டியலிடப்பட்ட வழக்குகளை விசாரிக்க முடியாமல் போனதால், இரவு 8 மணி பணியாற்றி 200க்கும் அதிகமான வழக்குகளை விசாரித்தது. இந்த அமர்வு ஒரு மணி நேரம் மதிய உணவுக்கு இடைவேளை எடுத்து கொண்டது. நீதிபதி ஷிண்டே ஓய்வு பெற இன்னும் 2 மாதங்களே உள்ள நிலையில், இவரை ராஜஸ்தான் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவி உயர்வு வழங்கி கொலிஜீயம் பரிந்துரை செய்துள்ளது. நேற்றும் இந்த அமர்வு 265 வழக்குகள் விசாரணைக்காக பட்டியலிட்டு இருந்தது. முன்னதாக., இதே நீதிமன்றத்தில் நீதிபதி எஸ்ஜே கதவாலா அமர்வு முதல் நாள் தொடங்கி மறுநாள் அதிகாலை 3 மணி வரை விசாரணை நடத்தியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. அந்த நீதிபதி இப்போது ஓய்வு பெற்று விட்டார்.