புதுடெல்லி: நுபுர் சர்மாவை கைது செய்ய கோரி டெல்லி ஜும்மா மசூதியில் இஸ்லாமியர்கள் போராட்டம் நடத்தினர். உத்தர பிரதேசத்தில் நடந்த போராட்டத்தில் வன்முறை வெடித்தது. இதில் போலீஸ் உயர் அதிகாரி, கலெக்டர் உள்ளிட்டோர் காயமடைந்தனர். நபிகள் நாயகம் குறித்து பாஜ தேசிய செய்தி தொடர்பாளராக இருந்த நுபுர் சர்மா சமீபத்தில் சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்தார். அதேபோல், இக்கட்சி தலைவர்களில் ஒருவரான ஜிண்டால் கூறிய கருத்தும் பெரும் சர்ச்சையானது. இந்தியாவில் மட்டுமின்றி பல்வேறு வெளிநாடுகளிலும் இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்தது. ஈரான், ஈராக், குவைத், கத்தார், சவுதி அரேபியா, ஓமான், அரபு அமீரகம், ஜோர்டன், ஆப்கானிஸ்தான், பஹ்ரைன், பாகிஸ்தான், மாலத்தீவு, லிபியா, இந்தோனேசியா ஆகிய நாடுகளும் இந்தியாவிற்கு எதிராக திரண்டு உள்ளன. இந்த விவகாரம் தொடர்பாக இந்திய அரசு சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. அதில், நபிகள் பற்றி நுபுர் சர்மா பேசியது அரசின் கருத்து கிடையாது. அது தனிப்பட்ட, கலகத்தை ஏற்படுத்தும் நபர்களின் கருத்து என்று இந்தியா விளக்கம் அளித்தது. எனினும், அரசுக்கு எதிராக எதிர்ப்பு வலுத்து நெருக்கடி ஏற்பட்டது. இதையடுத்து, நுபுர் சர்மா பாஜவில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார். எனினும், இதனை ஏற்க மறுத்த முஸ்லிம்கள், நுபுர் சர்மாவை கைது செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர். டெல்லியில் நேற்று வெள்ளிக்கிழமை தொழுகை முடிந்து மசூதியை விட்டு வெளியில் வந்த இஸ்லாமியர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். நுபுர் சர்மாவை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என கூறி ஜும்மா மசூதியில் போராட்டத்தை நடத்தினர். உத்தர பிரதேசத்திலும் நுபுருக்கு எதிராக பல்வேறு இடங்களில் போராட்டம் வெடித்தது. பிரயாக்ராஜ், சகரன்பூரில் நடந்த போராட்டத்தின் போது கல்வீச்சு, வாகனங்களுக்கு தீ வைப்பு என வன்முறை சம்பவங்கள் நிகழ்ந்தன. பிரயாக்ராஜில் இருசக்கர வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டது. போலீஸ் வாகனத்திற்கும் தீ வைப்பதற்கு முயற்சிக்கப்பட்டது. போலீசார் கண்ணீர்புகை குண்டுகளை வீசி கூட்டத்தை கலைத்தனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கல்வீச்சு தாக்கியதில், போலீஸ் உயர் அதிகாரி, மாவட்ட கலெக்டர் மற்றும் போலீசார் காயமடைந்தனர். அதே போல் சகரன்பூர், மொரதாபாத், லக்னோ உள்பட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் போராட்டத்தில் வன்முறை வெடித்தது. இதனால் பதற்றமான சூழல் நிலவியது.ஜார்கண்டில் ராஞ்சியில் உள்ள அனுமன் கோயில் அருகே இஸ்லாமியர்கள் நடத்திய போராட்டத்தை போலீசார் கட்டுப்படுத்த முயன்றனர். பதற்றம் ஏற்பட்ட நிலையில், வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டதோடு கூட்டத்தை கலைக்க தடியடி நடத்தினர். அவர்கள் மீது போராட்டக்காரர்கள் கல்வீசி தாக்கியதில் போலீசார் பலர் காயமடைந்தனர். ஜம்மு காஷ்மீரின் தோடா, கிஸ்த்வார் மாவட்டங்களில் நடந்த போராட்டங்களினால் பதற்றம் ஏற்பட்டது. இதனால் அந்த பகுதிகளில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல இடங்களில் இன்டர்நெட் சேவை முடக்கப்பட்டது. நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் நடந்த இந்த போராட்டத்தால் பெரும் பதற்றம் நிலவி வருகிறது. இதனால், போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது.