சென்னை: அரசு விரைவு போக்குவரத்துக்கழகத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள பயோ மெட்ரிக் மூலம் ஊழியர்களின் வருகையை முறையாகப் பதிவு செய்ய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக கிளை மேலாளர் உள்ளிட்டோருக்கு விரைவு போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:
அரசு விரைவு போக்குவரத்துக் கழக பணிமனையில் பணிபுரியும் தொழில்நுட்பப் பணியாளர்கள், நிர்வாகப் பணியாளர்கள் மற்றும் மேற்பார்வையாளர்களின் வருகைப் பதிவு முறை பயோ மெட்ரிக் மூலம் செயல்படுத்தப்படுகிறது.
இவர்கள் தங்களுக்கான பணி நேரத்தின் அடிப்படையில் பயோ மெட்ரிக் தளத்தில் வருகையைப் பதிவு செய்ய வேண்டும்.
ஓட்டுநர், நடத்துநரை பொருத்தவரை பேருந்து வழித்தடத்தில் செல்வதற்கு பணிமனை வாயிலில் இருந்து புறப்படும் போது சோதனை முறையில் பயோ மெட்ரிக் தளத்தில் வருகையைப் பதிவு செய்ய அறிவுறுத்தப்படுகிறார்கள். அதன் அடிப்படையில் இந்த பயோமெட்ரிக் முறை மேம்படுத்தப்படும்.
பணியிடமாறுதல் அடிப்படையில் பயோ மெட்ரிக் தளத்தில் ஊழியர்களின் பெயர்களை சேர்ப்பதற்கும், நீக்குவதற்கும் உடனடியாக தக்க நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.