புதுடெல்லி: ஜனாதிபதி தேர்தலில் பாஜ.வின் வேட்பாளருக்கு எதிராக பொது வேட்பாளரை நிறுத்த காங்கிரஸ் தலைவர் சோனியா சம்மதித்துள்ளார். ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் ஜூலை 24ம் தேதியுடன் முடிகிறது. எனவே, புதிய ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான தேர்தல், ஜூலை 18ம் தேதி நடத்தப்பட உள்ளது. இதில் பதிவாகும் வாக்குகள் ஜூலை 21ம் தேதி எண்ணப்பட உள்ளன.தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, வேட்பாளர் தேர்வில் ஆளும் கட்சியும், எதிர்க்கட்சிகளும் தீவிரமாக கவனம் செலுத்த தொடங்கி உள்ளன. பாஜ.வின் சார்பில் கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான் வேட்பாளராக நிறுத்தப்படக் கூடும் என்று டிவிட்டரில் நேற்று டிரண்டிங் ஆனது. இவர், முஸ்லிம்கள் தொடர்பான பிரச்னைகளில் பாஜவுக்கு ஆதரவாக கருத்துகளை கூறி வருகிறார். கடந்த 1986ல் ஷாபானு வழக்கில், அப்போதைய ஒன்றிய அரசின் நடவடிக்கைக்கு உடன்படாமல், தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். முத்தலாக் நடைமுறை நீக்க குரல் கொடுத்தார். அதனால், பாஜ.வின் வேட்பாளராக இவர் நிறுத்தப்படக் கூடும் என கருதப்படுகிறது.அதேபோல், சமீபத்தில் நடந்த உத்தரப் பிரதேச சட்டமன்றத் தேர்தலில் பாஜவின் வெற்றிக்கு பகுஜன் சமாஜ் கட்சித் தலைவரும், உபி முன்னாள் முதல்வருமான மாயாவதி உதவியதாக சொல்லப்பட்டு வருகிறது. அதற்கு பரிசாகவும், இவர் தலித் பிரிவை சேர்ந்தவர் என்ற அடிப்படையிலும் ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தப் படக்கூடும் என்று பேசப்பட்டு வருகிறது.மேலும், ஒன்றிய சிறுபான்மையினர் விவகாரங்கள் துறை அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வியின் பெயரும் பாஜ.வின் வேட்பாளர் பட்டியலில் உள்ளது. இவரின் மாநிலங்களவை எம்பி பதவிகாலம் முடியும் நிலையில், மீண்டும் போட்டியிட வாய்ப்பு கொடுக்கப்படவில்லை. ஜனாதிபதி தேர்தலில் களமிறக்கவே, அவருக்கு எம்பி வாய்ப்பு வழங்கப்படவில்லை என்று கருதப்படுகிறது.அதே நேரம், எதிர்க்கட்சிகளின் சார்பில் பொது வேட்பாளர் நிறுத்தப்படுவாரா? என்ற கேள்வி தொடர்ந்து எழுந்து கொண்டிருக்கிறது. இதற்கு பதில் சொல்லும் வகையில், பொது வேட்பாளரை நிறுத்துவற்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி சம்மதித்து இருக்கிறார். இது தொடர்பாக ஒருமித்த கருத்து ஏற்படுத்த, அனைத்து எதிர்க்கட்சிகளின் தலைவர்களுடனும் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்டோரை அவர் நியமித்து இருக்கிறார். சோனியாவின் உத்தரவுப்படி, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரை முதல் கட்டமாக கார்கே சந்தித்து பேசி இருக்கிறார்.எதிர்க்கட்சி தலைவர்கள் அனைவரின் ஆதரவையும் பெற்ற சரத்பவாரே, எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக நிறுத்தப்படுவதற்கான வாய்ப்புகளும் உள்ளன.இந்த சந்திப்புக்கு பிறகு கார்கே அளித்த பேட்டியில், ‘ஜனாதிபதி தேர்தலில் அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைந்து பொது வேட்பாளரை நிறுத்துவது குறித்து சிவசேனா தலைவரும், மகாராஷ்டிர முதல்வருமான உத்தவ் தாக்கரே, திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்களையும் சந்தித்து பேச உள்ளேன். அதன் பிறகு, பொது வேட்பாளரை நிறுத்துவது குறித்து முடிவு அறிவிக்கப்படும்,’ என்றார்.