சென்னை: பேருந்துக்கு அடுத்தபடியாக அதிகமானோர் ஆட்டோவை நாடினாலும், கட்டணம் விஷயத்தில் ஆட்டோ ஓட்டுநர்களுக்கும் பயணிகளுக்கும் இடையேயான தகராறு வாடிக்கையாகவே இருந்து வருகிறது. இதற்கு தீர்வு காணும் வகையில் போக்குவரத்துத் துறை ஆலோசனை நடத்தி, ஆட்டோ கட்டணம் தொடர்பான பரிந்துரையை அரசுக்கு அனுப்பியுள்ளது.
கடந்த 2013-ம் ஆண்டு 1.8 கி.மீ தூரத்துக்கு ரூ.25, அடுத்த ஒவ்வொரு கி.மீ-க்கு தலா ரூ.12, காத்திருப்பு கட்டணம் 5 நிமிடத்துக்கு ரூ.3.50, இரவு நேரத்தில் இந்த கட்டணத்தை இரட்டிப்பாக வசூலிக்க அனுமதித்து போக்குவரத்துத் துறை உத்தரவு பிறப்பித்தது. ஆனால் அரசு, மீட்டர் வழங்காத காரணத்தால் இந்த கட்டண உயர்வு அமல்படுத்தப்படவில்லை.
மேலும் அந்த காலகட்டத்தில் பெட்ரோல் லிட்டர் ரூ.60, டீசல் ரூ.45 என்றளவில் இருந்தது. மாசுபாட்டைக் கட்டுப்படுத்தும் வகையில், 75 சதவீதத்துக்கும் அதிகமான ஆட்டோக்கள் எல்பிஜியில் இயங்கும் வகையில் மாற்றியமைக்கப்பட்டன. அதன் விலையும் லிட்டர் ரூ.40 என்றிருந்தது.
ஆனால் தற்போது பெட்ரோல் விலை ரூ.100-ஐ கடந்து விற்கப்படுகிறது. எல்பிஜி விலையும் ரூ.67 என உயர்ந்துள்ளது. இதேபோல் அன்றாடம் பயன்படுத்தக்கூடிய அத்தியாவசியப் பொருட்களின் விலையும் அதிகரித்துள்ளது.
இந்நிலையில், ஆட்டோவுக்கான மீட்டர் கட்டணம் குறித்து ஆட்டோ தொழிற்சங்க நிர்வாகிகள் மற்றும் நுகர்வோர் நல அமைப்பினரிடம் போக்குவரத்துத் துறை ஆலோசனை நடத்தியது.
இதுகுறித்து போக்குவரத்துத் துறை அதிகாரிகள் கூறும்போது, ‘‘நுகர்வோர் அமைப்பு மற்றும் ஆட்டோ தொழிற்சங்கத்தினரிடம் பெறப்பட்ட கருத்துகளைப் பட்டியலிட்டு அரசுக்கு அனுப்பியுள்ளோம். அதன் அடிப்படையில் 1.5 கி.மீ தூரத்துக்கு ரூ.40, அடுத்த ஒவ்வொரு கி.மீ தூரத்துக்கும் ரூ.18 என வசூலிக்கும் வகையில் உத்தரவு பிறப்பிக்க வாய்ப்புள்ளது.
இதுதவிர, ஜிபிஎஸ் மீட்டர் வழங்குதல், அரசு சார்பில் முன்பதிவு செயலி வடிவமைத்தல் போன்ற அவர்களது கோரிக்கைகள் குறித்தும் அரசுக்கு பரிந்துரை செய்துள்ளோம்’’ என்றனர்.
போக்குவரத்துத் துறையின் பரிந்துரை குறித்து அனைத்து ஆட்டோ தொழிற்சங்க கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் எஸ்.பாலசுப்பிரமணியத்திடம் கேட்டபோது, ‘‘விலைவாசிக்கு ஏற்ப ஆட்டோ கட்டணம் நிர்ணயம் செய்யப்பட வேண்டும். 1.5 கி.மீ தூரத்துக்கு கட்டணமாக ரூ.50, அடுத்த ஒவ்வொரு கி.மீ.க்கும் ரூ.25 கட்டணமாக அரசு விதிக்க வேண்டும். ஆட்டோ காத்திருப்பு கட்டணத்தில், ஒரு நிமிடத்துக்கு ரூ.1 என நிர்ணயிக்க வேண்டும் என கோரியிருந்தோம்.
ஆனால் துறையின் பரிந்துரை, எங்கள் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் வகையில் உள்ளது. எங்களது நிலையைக் கவனத்தில் கொண்டு அரசு இறுதி முடிவை எடுக்க வேண்டும்’’ என்றார்.
ஆட்டோ கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கை குறித்து தமிழ்நாடு நுகர்வோர் பாதுகாப்பு பேரமைப்பு தலைவர் பால் பர்ணபாஸ் கூறும்போது, ‘‘1.8 கி.மீ முதல் 5 கி.மீ வரை, குறைந்தபட்சம் ரூ.30, அதிகபட்சம் ரூ.50 வசூலிக்க வேண்டும். அடுத்து ஒவ்வொரு கி.மீ-க்கும் 10 முதல் 12 ரூபாய் வசூலிக்க வேண்டும்.
3 மாதங்களுக்கு ஒருமுறை, நுகர்வோர் அமைப்பு, ஆட்டோ தொழிற்சங்கத்துடன் போக்குவரத்துத் துறை ஆலோசனை நடத்தி, பெட்ரோல் விலைக்கு ஏற்ப கட்டணத்தை சீராய்வு செய்ய வேண்டும். காவல்துறையின் ‘காவலன் செயலி’ மூலமாகவும் ஆட்டோ முன்பதிவு செய்வதற்கான வசதியை ஏற்படுத்தலாம்’’ என்றார்.
ஆட்டோவுக்கான மீட்டர் கட்டணத்தை எரிபொருள் விலைக்கு ஏற்ப நிர்ணயிக்க வேண்டும் என்ற உயர் நீதிமன்ற அறிவுறுத்தலையடுத்து, போக்குவரத்துத் துறை பரிந்துரைத்த கட்டணத்தை பரிசீலனை செய்து அமல்படுத்த வேண்டும் என்பது ஆட்டோ ஓட்டுநர்களின் கோரிக்கையாக உள்ளது.
அதேநேரம் தங்களைப் பாதிக்காத வகையில் கட்டணம் நிர்ணயிக்கப்பட வேண்டும் என்பதே பயணிகளின் வேண்டுகோளாக உள்ளது. ஆட்டோ கட்டணம் 1.5 கி.மீ தூரத்துக்கு ரூ.40, அடுத்த ஒவ்வொரு கி.மீ தூரத்துக்கும் ரூ.18 என வசூலிக்கும் வகையில் உத்தரவு பிறப்பிக்க வாய்ப்புள்ளது.