போகோட்டோ: 300 ஆண்டுகளுக்கு முன்பு சான் ஜோஸ் என்ற கப்பல் கொலம்பிய தலைநகர் போகோட்டோ அருகே 600 பேருடன் கடலில் மூழ்கியது. அண்மையில்தான் இந்தக் கப்பல் மூழ்கிய இடம் கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால் தற்போது அந்தக் கப்பல் யாருக்குச் சொந்தம் என்பதில் பலர் சண்டையிட்டு வருகின்றனர்.
அந்தக் கப்பலில் உள்ள ரூ.1.5 லட்சம் கோடி மதிப்பிலான தங்கத்துக்காக சண்டை நடக்கிறது. சரியாக 1708-ம் ஆண்டு ஜூன் மாதம் 8 தேதி கொலம்பியா நாட்டுக்கு அருகே கரீபியன் கடல் பகுதியில் சான் ஜோஸ் கப்பல் மூழ்கியது. கடந்த 2015-ல் அந்தக் கப்பல் கண்டுபிடிக்கப்பட்டது.
எனினும் கொலம்பிய அரசு தங்கப் புதையலுடன் மூழ்கிய சான் ஜோஸ் கப்பல் இருக்கும் இடத்தை துல்லியமாக அறிவிக்கவில்லை. ஆயினும் இது ரொசாரியோ தீவுகளுக்கு அருகே ஏதோ ஒரு இடத்தில் இருக்கலாம் என்றும் கூறப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தங்கத்துடன் மூழ்கிய சான் ஜோஸ் கப்பலுக்கு அருகே மேலும் 2 கப்பல்கள் மூழ்கி இருக்கும் வீடியோவை, ஸ்பெயின் அரசு வெளியிட்டுள்ளது.
அந்த வீடியோவில் சான் ஜோஸ் கப்பலுக்கு அருகே 2 கப்பல்கள் மூழ்கிக் கிடக்கின்றன. அதன் அருகே நீலம், பச்சை நிறங்களில், கடலின் அடியில் சிதறிக் கிடக்கின்ற தங்க நாணயங்கள், மட்பாண்டங்கள் மற்றும் பீங்கான் கோப்பைகள் தெரிகின்றன. தவிர, ஒரு பீரங்கியும் கடலின் அடிப்பரப்பில் காணப்படுகிறது. இதுதொடர்பாக ஆராய்ச்சி நடப்பதாக ஸ்பெயின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.