வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
போபால்-குழந்தையின் உடலை எடுத்துச் செல்ல அரசு மருத்துவமனை ஆம்புலன்ஸ் தராததால், 4 வயது மகள் உடலை தந்தையே தோளில் துாக்கி சென்ற காட்சி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
மத்திய பிரதேசத்தில், முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, சத்தர்பூர் மாவட்டத்தில், பக்ஸ்வாஹா அருகே உள்ள பவுடி கிராமத்தில் வசிப்பவர் லக்ஷ்மண் அஹிர்வர்.இவரது 4 வயது மகளுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது. பக்ஸ்வாஹா ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி செய்த டாக்டர், குழந்தையை சத்தர்பூர் மாவட்ட அரசு மருத்துவமனைக்கு எடுத்து செல்ல பரிந்துரை செய்தார்.
குழந்தை சத்தர்பூர் மருத்துவமனைக்கு எடுத்து செல்லப்பட்டும், அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தது. அஹிர்வர், இறந்த மகளின் உடலை கொண்டு செல்ல ஆம்புலன்ஸ் கேட்டார். ஆனால், மருத்துவமனை ஊழியர்கள் மறுத்து விட்டனர்.
இதையடுத்து, மகள் உடலை போர்வையால் போர்த்தி பஸ்சில் பக்ஸ்வாஹா வந்தடைந்தார். அங்கிருந்து தன் கிராமத்துக்கு செல்ல, நகராட்சி அலுவலகத்தில் வாகனம் ஏற்பாடு செய்து தருமாறு கேட்டார்; அவர்களும் மறுத்து விட்டனர்.
இதனால், 4 கி.மீ., துாரமுள்ள பவுடி கிராமத்துக்கு, அஹிர்வர் தன் மகள் சடலத்தை தோளிலேயே சுமந்து சென்றார். இந்தக் காட்சியை சிலர் ‘வீடியோ’ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். அது வேகமாக பரவி வருகிறது. இது குறித்து விசாரிக்க சத்தர்பூர் மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
Advertisement