பாலிவுட் நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் சொகுசு கப்பலில் போதைப்பொருள் பயன்படுத்தியதாக கைது செய்யப்பட்டு 20 நாள்களுக்கும் மேலாக சிறையில் இருந்தார். சொகுசு கப்பலில் ரெய்டு நடத்திய மும்பை போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரி சமீர் வான்கடே ஆரம்பத்தில் இவ்வழக்கை விசாரித்தார். ஆனால் அவர் மீது குற்றச்சாட்டுகள் எழுந்ததால் இவ்வழக்கு விசாரணையில் இருந்து விடுவிக்கப்பட்டார். போதைப்பொருள் தடுப்பு பிரிவின் டெல்லி சிறப்பு விசாரணைக்கு குழு சஞ்சய் சிங் தலைமையில் விசாரணை நடத்தியது. இவ்விசாரணைக் குழு சமீபத்தில் சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.
குற்றப்பத்திரிக்கையில் ஆர்யன் கான் பெயர் இடம்பெறவில்லை. ரெய்டின் போது ஆர்யன் கானிடம் போதைப்பொருள் எதுவும் பிடிபடவில்லை என்றும், போதைப்பொருள் பயன்படுத்தினார் என்பதை நிரூபிக்க மருத்துவ பரிசோதனை நடத்தப்படவில்லை என்றும் கூறப்பட்டத்தோடு இவ்வழக்கில் இருந்து ஆர்யன் கான் விடுவிக்கப்படுவதாக குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டு இருந்தது.
தற்போது இவ்வழக்கை விசாரித்த போதைப்பொருள் தடுப்பு பிரிவு துணை இயக்குனர் சஞ்சய் சிங் ஆர்யன் கானிடம் விசாரணை நடத்திய அனுபவத்தை பகிர்ந்து கொண்டுள்ளார். ஆர்யன் கான் தன்னிடம் கேட்ட கேள்விகள் மனதை உருக்குவதாக இருந்தது என்று தெரிவித்துள்ளார். ஆர்யன் கானிடம் திறந்த மனதுடன் பேசுவதாக உறுதியளித்த பிறகு என்னிடம் பேசினார். “சார் என்னை சர்வதேச போதைப்பொருள் கடத்தல்காரன் போன்றும், போதைப்பொருள் கடத்தலுக்கு நிதியுதவி செய்வதாகவும் சித்தரிக்கின்றனர். இந்த குற்றச்சாட்டுகள் மிகவும் அபத்தமானதாக இல்லையா? என்னிடம் போதைப்பொருள் எதுவும் பறிமுதல் செய்யப்படவில்லை. அப்படி இருந்தும் என்னை கைது செய்தனர். சார் நீங்கள் மிகப்பெரிய தவறு செய்துவிட்டீர்கள். எனது புகழையும் அழித்துவிட்டீர்கள். நான் ஏன் பல வாரங்கள் சிறையில் இருக்கவேண்டும். நான் அதற்குதான் தகுதியானவனா?” என்று சஞ்சய் சிங்கிடம் ஆர்யன் கான் கேட்டிருக்கிறார்.
ஆர்யன் கானின் தந்தை ஷாருக்கானும் சஞ்சய் சிங்கை சந்தித்து பேசினார். அது தொடர்பாக பேசுகையில், “ஷாருக் கான் என்னை சந்திக்க விரும்பினார். நான் ஏற்கனவே மற்ற கைதிகளின் பெற்றோர்களை சந்தித்திருப்பதால் ஷாருக்கானை சந்திக்க சம்மதம் தெரிவித்தேன்” என்று சஞ்சய் சிங் தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், “ஷாருக்கான் என்னை சந்தித்து பேசிய போது, ஆர்யன் கானின் மனநிலை குறித்து மிகவும் கவலை தெரிவித்தார். ஆர்யன் கான் சரியாக தூங்கவில்லை என்று சொன்னேன். அப்போது ஆர்யன் கானுடன் ஷாருக்கான் இரவில் தங்கினார். தனது மகன் மீதான குற்றச்சாட்டுக்கு எந்த வித பூர்வாங்க ஆதாரமும் இல்லாத நிலையில் அவர் இழிவுபடுத்தப்பட்டுள்ளார் என்று தெரிவித்தார். அதோடு மிகவும் கண்ணீர் மல்க, நாங்கள் மிகப்பெரிய கிரிமினல்கள் போலவும், சமுதாயத்தை அழிக்க துடிக்கும் அரக்கர்கள் போலவும் சித்தரிக்கப்பட்டுள்ளோம்” என்று தெரிவித்ததாக சஞ்சய் சிங் தெரிவித்தார்.