ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் நடைபெற்ற மாநிலங்களவை தேர்தலில் கடைசி நேரத்தில் காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவாக வாக்களித்த பாஜக பெண் எம்.எல்.ஏ. ஷோபாராணி குஷ்வாகா இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். நடந்து முடிந்துள்ள மாநிலங்களவை தேர்தலில் ராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி 3 இடங்களை கைப்பற்றியது. ஒரு இடத்தை பாஜக வென்றுள்ளது. பாஜக ஆதரவு பெற்ற சுயேச்சை வேட்பாளர் சுபாஷ் சந்திரா தோல்வி அடைந்துள்ளார். இவர் தொலைக்காட்சி குழுமத்தின் தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஷோபாராணி குஷ்வாகா அளித்த வாக்கே இவரது தோல்விக்கு காரணமாகும். ஷோபாராணி குஷ்வாகாவுக்கு உடனடியாக விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக ராஜஸ்தான் எதிர்க்கட்சி தலைவர் குலாம் ஷங் கட்டாரியா கூறியுள்ளார். அதுவரை ஷோபாராணி குஷ்வாகா கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும், விளக்கத்தை அடுத்து அவர் கட்சியில் இருந்தே வெளியேற்றப்பட வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். கட்சி மாறி வாக்களித்த பாஜக பெண் எம்.எல்.ஏ. ஷோபாராணி குஷ்வாகாவின் கணவரும், தோல்பூர் தொகுதி பகுஜன் சமாஜ் கட்சி எம்.எல்.ஏ.வாக இருந்தபோது ஆணவ கொலை வழக்கில் பதவி இழந்து சிறை தண்டனைக்கு ஆளானவர் என்பது குறிப்பிடத்தக்கது. கணவரின் பதவிக்கு போட்டியிட்டு வென்ற ஷோபாராணி குஷ்வாகாவும், பதவி இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.