உத்தரகண்ட் கிரிக்கெட் வீரர்கள் அம்மாநில கிரிக்கெட் வாரியத்தால் மோசமாக நடத்தப்பட்டு வந்துள்ளதாக வெளியாகியுள்ள தகவல்கள் அதிர்ச்சியளிக்கிறது.
ராஞ்சி கிரிக்கெட் போட்டியில் மும்பைக்கு எதிரான போட்டியில் உத்தராகண்ட் அணி 725 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. உத்தரகண்ட் அணி அடைந்த இந்த படுதோல்வி மிகப்பெரிய பேசுபொருளாக உருவெடுத்தநிலையில், அந்த தோல்வியை விஞ்சும் அளவிற்கு புதிய சர்ச்சை ஒன்று கிளம்பியுள்ளது. அது, உத்தரகண்ட் கிரிக்கெட் நிர்வாகம் வெளியிட்ட செலவு அறிக்கையில் இருந்துதான் இந்த பூகம்பம் கிளம்பியுள்ளது. கிரிக்கெட் வீரர்கள் எந்த அளவிற்கு மோசமாக நடத்தப்பட்டிருக்கிறார்கள், ஊழல் எந்த அளவிற்கு கிரிக்கெட் நிர்வாகத்தில் தலைவிரித்தாடுகிறது என்பது குறித்து அறிக்கைக்கு பின் விமர்சனங்கள் எழுந்துள்ளது.
இதுதொடர்பாக அதிர்ச்சி அளிக்கக் கூடிய பல்வேறு செய்திகள் வெளியாகி வருகிறது. நியூஸ் 9 செய்தி நிறுவனம் அளித்துள்ள ஆய்வு தகவலின்படி உத்தரகண்ட் கிரிக்கெட் வாரியம் தங்களுடைய வீரர்களுக்கு தினசரி உதவித் தொகையாக 100 ரூபாய் மட்டுமே வழங்கப்பட்டு வந்துள்ளதுதான் அதில் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு அதிர்ச்சி தகவல். அரசு நிர்ணயித்துள்ள சராசர் தினக்கூலியை விட பல மடங்கு குறைவாக இந்த உதவித்தொகை உள்ளது. இதில் வேடிக்கை என்னவென்றால் வாழை பழத்திற்காக மட்டும் அம்மாநில கிரிக்கெட் வாரியம் 35 லட்சம் ரூபாய் செலவழித்தது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதுதான். தண்ணீர் பாட்டில்களுக்காக 22 லட்சம் செலவிட்டுள்ளது.
அந்த அறிக்கையின்படி ஒரு கோடியே 74 லட்சம் ரூபாய் உணவுக்காகவும், சுமார் 50 லட்சம் ரூபாய் வீரர்களுக்கான உதவித் தொகையாகவும் செலவிடப்பட்டுள்ளதாக கணக்கு காண்பிக்கப்பட்டுள்ளது.
வழக்கமாக, மூத்த கிரிக்கெட் வீரர்களுக்கு 1500 ரூபாய் முதல் 2000 ரூபாய் வரை தினசரி உதவித் தொகையாக வழங்குவதுண்டு. ஆனால், கடந்த 12 மாதங்களாக வெறும் ரூ100 மட்டும் வழங்கி வந்துள்ளது. வீரர்களுக்கு சேர வேண்டிய பல்வேறு நிலுவைத் தொகையை வழங்காமல் அந்த கிரிக்கெட் வாரிய இழுத்தடித்து வந்துள்ளதாக கூறப்படுகிறது.
தங்களுக்கு வரவேண்டிய உதவித் தொகை மற்றும் நிலுவைத்தொகை குறித்து வீரர்கள் கேள்வி எழுப்பினாலும் சரியான பதில் வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. அப்படி கேட்கும் வீரர்களை ஸ்விக்கி – ஸ்மொட்டோவில் உணவை ஆர்டர் செய்யுமாறு வற்புறுத்துவதாகவும் பகிர் தகவல்கள் வெளியாகியுள்ளது.
விளையாட்டு வீரர்களை பொறுத்தவரை அவர்களுக்கு ஊட்டச்சத்துள்ள உணவுப் பொருட்களும், விளையாட்டு உபகரணங்களும் மிகவும் முக்கியமானவை. இவற்றிற்கு நிச்சயம் நிறைய செலவு ஆகும். அதனால்தான் ஏழ்மை நிலையில் இருக்கும் வீரர்களால் ஒரு கட்டத்திற்கு மேல் செல்ல முடிவதில்லை. இப்படி வீரர்களுக்கு சேர வேண்டிய தொகையை செலவிடாமல் மிகவும் ஏழ்மையான நிலையில் வீரர்களை வைத்திருந்தால் எப்படி சிறப்பான ஆட்டத்தை வீரர்களால் கொடுக்க முடியும் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM