இஸ்லாமிய இறை தூதர் மொகமது நபிகள் நாயகம் குறித்து பாஜக முன்னாள் செய்தி தொடர்பாளர் நுபுர் சர்மா, நவின் குமார் ஜிண்டால் ஆகியோர் தெரிவித்த கருத்துக்கள் உலகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இஸ்லாமிய நாடுகள் அனைத்தும் இச்சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. இந்தியாவில் தாக்குதல் நடத்தப்போவதாக அல்கொய்தா தீவிரவாத அமைப்பு மிரட்டி இருக்கிறது. நுபுர் சர்மா உட்பட இரண்டு பேரையும் கைது செய்யவேண்டும் என்று கோரி இந்தியாவில் உள்ள இஸ்லாமிய அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றன.
நேற்று, வெள்ளிக்கிழமை தொழுகைக்கு பிறகு நாடு முழுவதும் இஸ்லாமியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேற்கு வங்கத்தின் கவுகாத்தியில் நெடுஞ்சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அதோடு போலீஸ் வாகனங்களை தாக்கி சேதப்படுத்தினர். தோம்ஜூர் காவல் நிலையத்தில் கல்வீசித்தாக்கினர். நகரில் முக்கிய சாலைகளில் தடுப்பை ஏற்படுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பாஜக அலுவலகத்திற்கு தீவைப்பு
அதோடு ரயில் போக்குவரத்தும் நிறுத்தப்பட்டது. தடுப்புக்களை அப்புறப்படுத்த முயன்ற போலீஸார் மீது போராட்டக்காரர்கள் தாக்கியதில் 12 போலீஸார் காயம் அடைந்தனர்.
கவுகாத்தியில் பாஜக அலுவலகத்துக்கு தீவைக்கப்பட்டது. இதையடுத்து மாநில அரசு வரும் திங்கள் கிழமை வரை இண்டர்நெட் சேவையை முடக்கி வைத்திருக்கிறது. போனில் பேசிக்கொள்ளலாம். கலவரத்தை அடக்க ராணுவத்தை நிறுத்தவேண்டும் என்று பாஜக கோரிக்கை விடுத்துள்ளது. கவுகாத்தி மாவட்டத்தில் உள்ள துலாகர், பஞ்ச்லா, உலுபெரியா போன்ற பகுதிகள் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. குஜராத், டெல்லி, ஜம்மு காஷ்மீர், உத்தரப்பிரதேசம், தெலங்கானா, மத்திய பிரதேசம், கர்நாடகா, பீகார், மகாராஷ்டிரா உட்பட மொத்தம் 9 மாநிலங்களில் இஸ்லாமியர்கள் போராட்டம் நடத்தினர். உத்தரப்பிரதேசம், ஜார்க்கண்ட், மேற்கு வங்கத்தில் நடந்த போராட்டத்தில் மொத்தம் 40 போலீஸார் காயம் அடைந்தனர்.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் கலவரத்திற்கு இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். ராஞ்சி நகரில் நடந்த போராட்டம் மற்றும் வன்முறையில் காயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இருந்த 2 பேர் சிகிச்சை பலனலிக்காமல் உயிரிழந்தனர். மேலும் 10 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். போராட்டம் காரணமாக ராஞ்சியின் பல இடங்களில் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதோடு போராட்டக்காரர்கள் மீது போலீஸார் தடியடி நடத்தினர். மேற்கொண்டு வன்முறை ஏற்படாமல் இருக்க கூடுதல் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.