கன்னியாகுமரி அருகே குமாரசுவாமி திருக்கோவிலின் தேர்த்திருவிழாவின் போது, திமுகவினர் மற்றும் பாஜகவினர் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக, பாஜக சட்டமன்ற உறுப்பினர் எம் ஆர் காந்தி உள்ளிட்ட 100 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டம், தக்கலை அருகே குமாரசாமி திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலின் திருவிழா கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்த நிலையில், இன்று தேரோட்டம் நடைபெற இருந்தது.
இதில் திமுக அமைச்சர் மனோ தங்கராஜ் தேரை வடம்பிடித்து இழுப்பதற்கு பாஜக தரப்பில் இருந்து எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. மேலும் இதுகுறித்த சுவரொட்டிகள் நேற்று அந்த பகுதியில் ஒட்டப்பட்டிருந்தது.
இதன் காரணமாக இன்று தேரோட்டம் நடைபெறும் போது அசம்பாவிதங்கள் நடக்காதவாறு போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.
இந்த நிலையில், திமுக அமைச்சர் மனோ தங்கராஜ் இன்று தேரை வடம்பிடித்து இழுத்து தொடங்கி வைத்தார். அப்போது பாஜக தரப்பினர் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து கோஷமிட்டனர்.
இதனால் திமுக மற்றும் பாஜகவினர் இடையே மோதல் வெடித்தது. இதன் காரணமாக போலீசார் பாஜக சட்டமன்ற உறுப்பினர் காந்தி உள்ளிட்ட 100 பேரை கைது செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.