சென்னை: தமிழகத்தின் சில மாவட்டங்களில் கரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், மக்கள் நல்வாழ்வுத் துறை அதிகாரிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று காலை ஆலோசனை நடத்தினார்.
இந்தியாவில் கேரளா, டெல்லி, மகாராஷ்டிரா, கர்நாடகா போன்ற மாநிலங்களில் தினசரி கரோனா தொற்று அதிகரித்துக் கொண்ட வருகிறது. தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு போன்ற மாவட்டங்களில் தொற்று எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனைக் கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று மத்திய சுகாதாரத் துறை செயலர் கடந்த வாரம் கடிதம் எழுதியிருந்தார்.
தமிழகத்தில் கடந்த 2 மாதமாக தினசரி தொற்று 100-க்கும் கீழ் இருந்து. ஆனால், நேற்று ஒரே நாளில் சென்னையில் மட்டும் 100-க்கும் மேற்பட்டோருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் தினசரி பாதிப்பு 200-ஐ கடந்துள்ளது.
இந்நிலையில், கரோனா தொற்றை கட்டுப்படுத்துவது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று காலை மக்கள் நல்வாழ்வுத் துறை அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் தலைமை செயலாளர் இறையன்பு, சுகாதாரத் துறை செயலர் ராதாகிருஷ்ணன், சிறப்பு செயலர் செந்தில்குமார், பொது சுகாதாரத் துறை இயக்குநர் செல்வ விநாயகம், தமிழக டிஜிபி சைலேந்திர பாபு மற்றும் சுகாதாரத் துறை உயர் அதிகாரிகள், வருவாய் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இதில், கரோனா தொற்றினை கட்டுப்படுத்த என்ன நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும், தொற்று அதிகமாக உள்ள மாவட்டங்களில் கண்காணிப்பை தீவிரப்படுத்துவது, வெளி மாநிலங்களில் இருந்து தமிழகம் வரும் பயணிகளைக் கண்காணிப்பது மற்றும் அறிகுறி இருந்தால் பரிசோதிப்பது போன்ற நடைமுறைகளை அதிகப்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.