திருநெல்வேலி மாவட்டம் பணகுடியைச் சேர்ந்தவர் ஜெபசிங். இவர், தூத்துக்குடியில் நடந்த ஒரு திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வந்துள்ளார். அங்கு தூத்துக்குடி, திரு.வி.க நகரைச் சேர்ந்த மாரிமுத்து, பசும்பொன் நகரைச் சேர்ந்த மற்றொரு மாரிமுத்து ஆகிய தனது நண்பர்களைச் சந்தித்துள்ளார். மாலையில் நடந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சி முடிந்ததும், 3வது மைல் ரயில்வே பாலத்தின் கீழ் பகுதியில், தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் இருந்து மீளவிட்டான் செல்லும் ரயில்வே ட்ராக்கில் அமர்ந்து மது அருந்தியுள்ளனர்.
மதுபோதை தலைக்கு ஏறியதும் மூன்று பேரும் ரயில்வே ட்ராக்கிலேயே அயர்ந்து படுத்துத் தூங்கியுள்ளனர். இந்த நிலையில், அதிகாலை 3 மணிக்கு தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து ஆந்திர மாநிலம் நூஸ்வித் ரயில் நிலையம் நோக்கி, ஒரு சரக்கு ரயில் புறப்பட்டுச் சென்றது. இந்த ரயில், ரயில்வே ட்ராக்கில் படுத்து உறங்கிக் கொண்டிருந்த 3 பேர் மீதும் மோடியது. இதில், ட்ராக்கில் குறுக்காகப் படுத்திருந்த இரு மாரிமுத்துவும் உயிரிழந்தனர். இதில், ஒருவரின் தலை துண்டானது. நீள வாக்கில் படுத்திருந்த ஜெபசிங் பலத்த காயங்களுடன் உயிர் தப்பினார்.
இதனையடுத்து சரக்கு ரயில் சென்றதும் சுதாரித்துக் கொண்ட ஜெபசிங் உடலில் ஏற்பட்ட காயங்களுடன் அருகில் உள்ள தெருவுக்குச் சென்று நண்பர்கள் மூலம் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்துள்ளார். “கல்யாண வரவேற்பு நிகழ்ச்சி முடிஞ்சதுமே நாங்க மூணு பேரும் சேர்ந்து பக்கத்துல உள்ள ட்ராக்குல உட்கார்ந்து மது அருந்தினோம். ரொம்ப நாள் கழிச்சு மூணு பேரும் சந்திச்சதுனால கொஞ்சம் ஓவர் ஆயிடுச்சு. அப்படியே ட்ராக்கிலேயே படுத்துத் தூங்கிட்டோம். இது சரக்கு ரயில் போகுற ட்ராக். ரயில் பெரும்பாலும் வராதுன்னுதான் அவங்க சொன்னாங்க.
அவங்க ரெண்டு பேரும் உள்ளூர்காரங்க. ரயில் எப்போ வரும், போகும்னு அவங்களுக்குத்தானே தெரியும்னு அவங்க சொன்னதை நம்பி நானும் ட்ராக்குலயே படுத்துட்டேன். நான் நீட்டு வாக்குல படுத்ததுனால தப்பிச்சுட்டேன். அவங்க ரெண்டு பேரும் தண்டவாளத்துல தலை சாய்ச்சபடியே குறுக்குவாக்குல படுத்தாங்க. ரயில் வரும்னு நினைக்கல. போதை அதிகமா ஏறுனதுனால ரயில் ஹாரன் சத்தம் காதுல விழல. ரயில் என்ஜினின் வெளிச்சத்தையும் உணர முடியலை. கட கட..ன்னு வேகமா ரயில் கடந்து போகுற போதுதான் ரயில் போகுறதை லேசா உணர முடிஞ்சுது” எனப் போலீஸில் கூறியிருக்கிறார்.
“அமைதியான அதிகாலை நேரத்தில் ரயிலின் ஹாரன் சத்தத்தைக்கூட கேட்டு உணர முடியாமல் மூவரும் படுத்திருந்தனர் என்றால், மதுவுடன் சேர்த்து கஞ்சா புகைத்திருக்கலாம். அதனால்தான் அவர்களால் எழுந்திருக்க முடியாமல் போயிருக்கிறது” எனவும் போலீஸார் சந்தேகத்துடன் கூறுகிறார்கள். திரு.வி.க நகரைச் சேர்ந்த மாரிமுத்து, கடந்த 9 மாதத்திற்கு முன்பு நடந்த ஒரு கொலை வழக்கில் கைதி செய்யப்பட்டவர் ஆவார்.
அவர், குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு கடந்த 2 மாதத்திற்கு முன்புதான் சிறையில் இருந்து வெளியே வந்துள்ளார். மற்றொரு மாரிமுத்து மீது வழிப்பறிக் கொள்ளை வழக்குகள் உள்ளன. இவரும் கடந்த ஒரு மாதத்திற்கு முன்புதான் வெளியே வந்துள்ளார். அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஜெபசிங்கும் ஒரு கொலை வழக்கில் கைதாகி 3 மாதங்களுக்கு முன்புதான் ஜாமீனில் வெளியே வந்துள்ளார். ரயில்வே ட்ராக்கில் ரயில் மோதி இருவர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.