பெங்களூரு
87-வது ரஞ்சி கோப்பை கிரிக்கெட்டில், பெங்கால்-ஜார்கண்ட் அணிகள் இடையிலான கால்இறுதி ஆட்டம் பெங்களூருவில் கடந்த 6-ந்தேதி தொடங்கியது. இதில் பெங்கால் அணி முதல் இன்னிங்சில் 7 விக்கெட்டுக்கு 773 ரன்கள் குவித்து ‘டிக்ளேர்’ செய்தது. ஜார்கண்ட் அணி முதல் இன்னிங்சில் 298 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. 475 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை ஆடிய பெங்கால் 4-வது நாள் முடிவில் 3 விக்கெட்டுக்கு 76 ரன்கள் எடுத்து இருந்தது. அனுஸ்துப் மஜூம்தார் 22 ரன்களுடனும், மனோஜ்திவாரி 12 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
இந்த நிலையில் 5-வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நேற்று நடந்தது. தொடர்ந்து ஆடிய பெங்கால் அணி 85.1 ஓவர்களில் 7 விக்கெட்டுக்கு 318 ரன்கள் எடுத்து 739 ரன்கள் முன்னிலையுடன் ‘டிக்ளேர்’ செய்தது. தனது 28-வது முதல்தர போட்டி சதத்தை நிறைவு செய்த மனோஜ் திவாரி 136 ரன்கள் (185 பந்து, 19 பவுண்டரி, 2 சிக்சர்) விளாசினார். 36 வயதான மனோஜ் திவாரி மேற்கு வங்காள விளையாட்டுத் துறை மந்திரி என்பது குறிப்பிடத்தக்க அம்சமாகும்.
அத்துடன் இந்த ஆட்டம் ‘டிரா’வில் முடித்து கொள்ளப்பட்டது. முதல் இன்னிங்ஸ் முன்னிலை அடிப்படையில் பெங்கால் அரைஇறுதிக்கு தகுதி பெற்றது. அரைஇறுதியில் பெங்கால் அணி, மத்தியபிரதேசத்தை சந்திக்கிறது. மற்றொரு அரைஇறுதியில் மும்பை-உத்தரபிரதேச அணிகள் மோதுகின்றன. இவ்விரு ஆட்டங்கள் பெங்களூருவில் வருகிற 14-ந் தேதி தொடங்குகிறது.