'விக்ரம் வேதா' ஹிந்தி ரீமேக் படப்பிடிப்பு நிறைவு
புஷ்கர் காயத்ரி இயக்க, சாம் சிஎஸ் இசையமைக்க, மாதவன், விஜய் சேதுபதி, கதிர் மற்றும் பலர் நடித்து 2017ம் ஆண்டு வெளிவந்து பெரும் வரவேற்பையும், வெற்றியையும் பெற்ற படம் 'விக்ரம் வேதா'. இப்படத்தை ஹிந்தியிலும் புஷ்கர் காயத்ரி இயக்க, ஹிருத்திக் ரோஷன், சைப் அலிகான் மற்றும் பலர் நடிக்க உருவாகி வருகிறது. இதன் படப்பிடிப்பு தற்போது முடிவடைந்துள்ளது.
இது குறித்து படத்தின் இயக்குனர்கள் புஷ்கர் காயத்ரி கூறுகையில், “நாங்கள் இப்போது படப்பிடிப்பை முடித்துவிட்டோம். ஒரு விஷயத்தை நாங்கள் இப்போது நிச்சயமாக இழக்கிறோம். படத்தின் ஆரம்பத்திலும், முடிவிலும் ஹிருத்திக்கின் அன்பான அரவணைப்பு. உங்களுடன் பணியாற்றுவது உண்மையிலேயே பாக்கியம். நீங்கள் அரங்கிற்குக் கொண்டு வரும் அரவணைப்பு மற்றும் உண்மையான அன்பு மிகப் பெரியது. என்ன ஒரு அற்புதமான பயணம், கடைசியாக 'விக்ரம் வேதா' படப்பிடிப்பு நிறைவடைந்தது. எங்கள் குழுவிற்கும், அற்புதமான நடிகர்களுக்கும் மிக்க நன்றி. செப்டம்பர் 30ம் தேதி உங்கள் அருகாமையில் உள்ள தியேட்டர்களில்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.
படத்தின் நாயகன் ஹிருத்திக் ரோஷன் “அரங்கில் படப்பிடிப்பு முடிந்தது என்று நாங்கள் சொன்ன போது, எனது மனம் மகிழ்ச்சியாலும், நினைவுகளாலும், சோதனையான நேரங்களாலும், ஆக்ஷன், த்ரில், கடின உழைப்பு என விக்ரம் வேதா படத்திற்காக நாங்கள் செய்தவையால் நிறைந்திருந்தது. எனது தலைக்குள் கொஞ்சம் உற்சாகமான பதட்டனமான நடனம் நடக்கிறது. எங்களது வெளியீட்டு தேதிக்கு பக்கத்தில் இருக்கிறோம்,” என்று குறிப்பிட்டுள்ளார்.
தமிழைப் போலவே ஹிந்தியிலும் இப்படம் பெரிய வரவேற்பைப் பெறும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ஹிந்தியில் ரோகித் சராப், ராதிகா ஆப்தே, யோகிதா பிஹானி ஆகியோரும் நடிக்கிறார்கள்.