திருச்செந்தூர், அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் புதுச்சேரி மாநிலத்தின் முன்னாள் முதல்வர் நாராயணசாமி சுவாமி தரிசனம் செய்தார். பின்னர் விருந்தினர் மாளிகையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “பா.ஜ.க செய்தி தொடர்பாளரான நுபுர் சர்மா, நபிகள் நாயகம் பற்றி பேசிய சர்ச்சைக் கருத்துகள் இஸ்லாமியர்களின் மனதைப் புண்படுத்தியுள்ளது. பா.ஜ.க, ஆர்.எஸ்.எஸ் மற்றும் அதனை சார்ந்த அமைப்புகள் சிறுபான்மை மக்களை கொச்சைப்படுத்தி பேசி வருகின்றன. இது உலக அரங்கில் இந்தியாவுக்கு பெரும் தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளது. அண்டை நாடுகள் இந்தியாவிற்கு கண்டனம் தெரிவித்துள்ளது. இஸ்லாமிய நாடுகளில் உள்ள பிற மதத்தினர் 2 கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
வரும் 13-ம் தேதி அமலாக்கத்துறையினர் முன்பு அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, சோனியா காந்தி ஆகியோர் ஆஜராக வேண்டும் என சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. ஏற்கனவே கடந்த 2015-ம் ஆண்டு நேஷனல் ஹெரால்டு நிறுவனத்தை வாங்கியதில் பணப்பரிவர்த்தனை நடந்தாக சுப்பிரமணியன் சுவாமி புகார் கூறியுள்ளார். அப்போது இதுகுறித்து விசாரணை நடத்தி, ”எந்தவிதமான பணப்பரிவர்த்தனையும் தவறாக நடக்கவில்லை” என வழக்கு முடிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், தற்போது 8 ஆண்டுகள் கழித்து அமலாக்கத்துறை மீண்டும் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. பா.ஜ.க-வின் அங்கங்களாக, சேவகர்களாக, அமலாக்கதுறை, வருமானவரித்துறை, சி.பி.ஐ நடந்து கொள்கிறது. கடந்த 2014 முதல் இந்த அமைப்புகளைப் பயன்படுத்தி பா.ஜ.க., பல மாநிலங்களில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. பிற கட்சியினர் மீது அமலாக்கத்துறை, வருமான வரிதுறையினர் நோட்டீஸ் அனுப்பி பொய்வழக்கு போடப்பட்டு மிரட்டப்படுகின்றனர்.
முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங்கின் ஆட்சிக் காலத்தில் நான் அமைச்சராக இருந்த போது, எந்த பொய் வழக்கும் போட்டது கிடையாது. நாங்கள் அதிகார துஷ்பிரயோகம் செய்ததும் கிடையாது. விதிமுறைப்படி எங்கள் அரசு செயல்பட்டது. வரும் 13-ம் தேதி அமலாக்கத்துறையில் ராகுல்காந்தி ஆஜராகும் போது, எல்லா மாநிலங்களிலும் உள்ள வருமானவரித்துறை, அமலாக்க துறை அலுவலகங்கள் முன்பு போராட்டம் நடத்த உள்ளோம்.
பிரதமர் நரேந்திர மோடியின் ஆட்சி, கடந்த 8 ஆண்டுகளில் எந்த சாதனையையும் செய்யவில்லை. பொருளாதார வளர்ச்சி தற்போது 6 சதவீதமாக உள்ளது. பெட்ரோல், டீசல் விலை விண்ணை முட்டுகிறது. சமையல் கேஸின் விலை ரூ.1,080-யாக உள்ளது. காய்கறி, அரிசி, கோதுமை உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்களின் விலையும் உயர்ந்துள்ளது. இதுதான் பிரதமர் மோடி ஆட்சியின் சாதனையாக உள்ளது. மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை. கொரோனா காலத்தில் சிறு தொழில், குறுதொழில், அமைப்பு சாரா தொழிலாளர்கள் என சுமார் 25 கோடி பேர் வேலை இழந்துள்ளனர்.
கொரோனா காலகட்டத்தில் இந்தியாவில் இறந்தவர்கள் 5 லட்சம் பேர்தான் என மோடி அரசு கூறுகிறது. ஆனால், சுமார் 50 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் பா.ஜ.க வளர்ந்துவிட்டதைப் போல ஒரு தோற்றத்தை ஏற்படுத்துகின்றனர். தமிழக அரசின் மீது அண்ணாமலை ஆதாரமில்லாத குற்றம்ச்சாட்டை வைக்கிறார். 2024-ம் ஆண்டு 17 கட்சிகள் இணைந்து பொதுத்தேர்தலைச் சந்திப்போம். நிச்சயம் ஆட்சி மாற்றம் வரும்” என்றார்.