சென்னை: குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தினத்தில் “இடைநில்லாக் கல்வி… தடையில்லா வளர்ச்சி” என்ற இலக்கை நோக்கி பயணிப்போம் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பெய்யாமொழி தெரிவித்துள்ளார்.
குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வெளியிட்டுள்ள அறிக்கை:
“ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு
எழுமையும் ஏமாப் புடைத்து” என்ற திருக்குறளுக்கு ஒரு தலைமுறையில் பெறும் கல்வி அறிவானது ஏழேழு தலைமுறைக்கும் பாதுகாப்பாக அமையும் என்று முன்னாள் முதல்வர் கருணாநிதி தன் உரையில் கூறுகிறார்.
அதற்கிணங்க, கல்வி அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்று ஊர் தோறும் பள்ளிகள் திறந்து தமிழகத்தில் கல்விப் புரட்சியை ஏற்படுத்தியவர் கருணாநிதி. அவ்வாறே, கருணாநிதி வழிவந்த நம் முதல்வர் “கல்வியும் சுகாதாரமும் எனது இரு கண்கள்” என்று கூறி அதனை உயர்த்தும் வகையில் பல்வேறு திட்டங்களைத் தீட்டி மாணவக் கண்மணிகள் மீது தனிக்கவனம் செலுத்தி வருகிறார்.
தமிழ்நாட்டில் உள்ள 18 வயதிற்கு உட்பட்ட அனைத்துக் குழந்தைகளும் பள்ளிக்குச் சென்று கல்வி, கலை, இலக்கியம் மற்றும் விளையாட்டுகளில் கவனம் செலுத்தி தம் அறிவைப் பெருக்கி புதிய வரலாறு படைக்கும் சிற்பிகளாகத் திகழவேண்டும் என்பது முதல்வரின் கனவு. இதற்கு செயல்வடிவம் வழங்கும் வகையில் இவ்வரசு பல்வேறு சிறப்பான செயல் திட்டங்களை வகுத்து திறம்பட செயல்படுத்தி வருகிறது.
புதிதாய்ப் பிறக்கும் இக்கல்வியாண்டில் புதிய உத்வேகத்துடன் செயல்பட அரசு வழங்கும் விலையில்லா பாடப் புத்தகங்கள், சீருடைகள், மடிக்கணினி, கல்வி உபகரணங்கள், புத்தகப் பை, முட்டையுடன் கூடிய சத்தான மதிய உணவு, மிதிவண்டி, கட்டணமில்லாப் பேருந்து வசதி, உயர் கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதாந்திர ஊக்கத் தொகை மற்றும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு காலைச் சிற்றுண்டி வழங்கும் மகத்தான திட்டம் உள்ளிட்ட அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகளை அனைத்துக் குழந்தைகளும் முழுமையாக பயன்படுத்தி தங்களை மேம்படுத்தி சமுதாய வளர்ச்சிக்கு வித்திட வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன்.
கூவும் குயில்களாகவும், ஆடும் மயில்களாகவும், கல்வி வானில் சிறகடிக்கும் சுதந்திரப் பறவைகளாகவும் “மாணவப் பருவம் மாணவருக்கே, குழந்தைப் பருவம் குழந்தைகளுக்கே” என்பதை உறுதி செய்திடும் வகையில், குழந்தை தொழிலாளர் முறையினை முற்றிலும் அகற்றிட நமது சிறந்த கல்வி முறையினை பயன்படுத்தி ஒளிமயமான எதிர்காலத்தை உருவாக்கிட குழந்தைகள் அனைவரும் பள்ளிக்கு வாருங்கள் என அன்புடன் இருகரம் நீட்டி அழைக்கின்றேன்.
பெற்றோர் அனைவரும் பள்ளி செல்லும் வயதுடைய தங்களது குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பி பெருமைப்படுத்த வேண்டும் என்றும், தொழில் நிறுவனங்களின் உரிமையாளர்கள் எந்த சூழ்நிலையிலும் குழந்தைகளை பணிக்கு அமர்த்தமாட்டோம் என்றும், ஆசிரியர்கள் அனைவரும் அர்ப்பணிப்பு உணர்வோடு பணி செய்து தரமான கல்வியினை மாணவர்களுக்கு வழங்குவோம் என்றும், குழந்தைத் தொழிலாளர் முறை அற்ற மாநிலமாக தமிழ்நாடு விளங்க “இடைநில்லாக் கல்வி… தடையில்லா வளர்ச்சி” என்ற இலக்கினை நோக்கிப் பயணிப்போம் என்றும் குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பு தினமான இன்று அனைவரும் உறுதியேற்போம்” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.