புதுடெல்லி: நூபுர் சர்மா சர்ச்சையின் எதிரொலியாக நாட்டின் பல பகுதிகளில் போராட்டங்களும், வன்முறைச் சம்பவங்களும் அரங்கேறிவரும் நிலையில், இந்த விவகாரத்தில் கண்காணிப்புடன் உரிய முறையில் செயலாற்ற வேண்டும் என்று மாநில அரசுகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் எச்சரிக்கையுடன் கூடிய அறிவுறுத்தலை வழங்கியுள்ளது.
முகமது நபிகள் குறித்து பாஜகவின் நூபுர் சர்மா தெரிவித்த சர்ச்சையான கருத்துக்கு முஸ்லிம் நாடுகள் பல இந்தியாவுக்கு கண்டனம் தெரிவித்தன. இந்தியப் பொருட்களை நிராகரிக்க வேண்டும் என வளைகுடா நாடுகளில் சமூக ஊடகங்கள் மூலம் தகவல்கள் பரப்பப்பட்டன. இதையடுத்து, நூபுர் சர்மாவின் கருத்து இந்திய அரசின் கருத்து அல்ல என்று மத்திய அரசு பதில் அளித்தது.
இதன் தொடர்ச்சியாக, நூபுர் சர்மாவை சஸ்பெண்ட் செய்த பாஜக, நவீன் ஜிண்டாலை கட்சியை விட்டு நீக்கியது. கட்சிப் பொறுப்பாளர்கள், பொதுவில் கருத்துகளை தெரிவிக்கும்போது பொறுப்புடன் செயல்பட வேண்டும் எனவும் பாஜக அறிவுறுத்தியது.
இந்த நிலையில், நூபுர் சர்மாவின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லி, உத்தரப் பிரதேசம், மேற்கு வங்கம்,குஜராத், ஜார்கண்ட் மாநிலங்களில் இஸ்லாமியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் ஜார்கண்ட், மேற்கு வங்கம் மாநிலங்களில் வன்முறை சம்பவங்களும் அரங்கேறி உள்ளன. பதற்றமிக்க பகுதிகளில் 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது.
நூபுர் சர்மாவை கைது செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட வலியுறுத்தல்களுடன் போராட்டங்கள் வலுத்து வரும் சூழலில், நாடு முழுவதும் நடக்கும் வன்முறைச் சம்பவங்களை கண்காணித்து வருவதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும், கலவரங்களை கட்டுக்குள் வைத்திருப்பதற்கான ஆலோசனைகளை மாநில அரசுகளுக்கு வழங்கி இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.
அத்துடன், காவலர்கள் தகுந்த பாதுகாப்பு ஏற்பாட்டோடு இருக்குமாறும் மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. இந்த தகவல்களை மூத்த உள்துறை அமைச்சக அதிகாரி ஒருவர், ‘தி இந்து’ ( ஆங்கிலம்) நாளிதழிடம் உறுதிப்படுத்தியிருக்கிறார்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மூன்று நாள் பயணமாக குஜராத் சென்றிருக்கிறார். குஜராத்தில் இந்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளதால் இது தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில் அமித் ஷா பங்கேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே, ஹவுராவில் வெடித்த கலவரம் தொடர்பாக பாஜகவை குற்றம்சாட்டி மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கருத்து தெரிவித்துள்ளார். அதன் விவரம் > நூபுர் சர்மா சர்ச்சை | “ஹவுரா கலவரங்களுக்குப் பின்னால் பாஜக” – மேற்கு வங்க முதல்வர் மம்தா காட்டம்