திருவனந்தபுரம்: கேரளாவில் முதல்வர் பினராயி விஜயன் ராஜினாமா செய்யக் கோரி காங்கிரஸ் தொடர்ந்து 3-வது நளாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கேரளாவில் ஐக்கிய அரபு அமீரக தூதரகத்தின் பெயரில் கடத்திவரப்பட்ட ரூ.15 கோடி மதிப்பிலான தங்கத்தை திருவனந்தபுரம் விமான நிலையத்தில் அதிகாரிகள் கடந்த ஆண்டு ஜூலை மாதம் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக தூதரகத்தின் முன்னாள் ஊழியர் ஸ்வப்னா சுரேஷ் என்பவர் உட்பட சிலர் கைது செய்யப்பட்டனர். ஜாமீனில் வெளிவந்துள்ள ஸ்வப்னா சுரேஷ், தங்கம் கடத்தலில் கேரள முதல்வர் பினராயி விஜயன் மற்றும் அவரது குடும்பத்தாருக்கு தொடர்பு இருப்பதாக தெரிவித்தார்.
இதையடுத்து பினராயி விஜயன் பதவியில் இருந்து விலககோரி எதிர்க்கட்சியான காங்கிரஸ் சார்பில் போராட்டங்கள் நடந்து வருகின்றன. நேற்று 3-வது நாளாக காங்கிரசார் போராட்டத்தில் ஈடுபட்டனர். திருவனந்தபுரத்தில் தலைமை செயலகம் முன் கேரள காங்கிரஸ் தலைவர் கே.சுதாகரன் போராட்டத்தை தொடங்கி வைத்தார். எர்ணாகுளத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சதீசன் தலைமையில் போராட்டம் நடந்தது. மலப்புரம், கண்ணூர் உட்பட பல மாவட்டங்களில் காங்கிரஸ் போராட்டம் நடத்தியது. போராட்டக்காரர்களை போலீஸார் தடியடி நடத்தியும் தண்ணீரை பீய்ச்சியடித்தும் கலைத்தனர். கொல்லம் மாவட்டத்தில் போலீஸாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் ஏற்பட்ட மோதலில் 2 போலீஸார் காயமடைந்தனர்.
போலீஸ் தடியடியில் காங்கிரசார் பலர் காயமடைந்தனர். கோட்டயத்தில் போலீஸார் மீது போராட்டக்காரர்கள் கல்வீ்ச்சில் ஈடுபட்டனர். காங்கிரசார் போராட்டம் காரணமாக பல இடங்களில் பதற்றம் நிலவியது. இதனிடையே, கலவரத்தை தூண்டும் நோக்கம், கிரிமினல் சதி ஆகிய பிரிவுகளின் கீழ் ஸ்வப்னா சுரேஷ் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். இது தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் ஸ்வப்னா சுரேஷ் தாக்கல் செய்த முன் ஜாமீன் மனு கடந்த வியாழக்கிழமை தள்ளுபடி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
பினராயி விஜயனின் தூதுவர் மிரட்டல் ஸ்வப்னா சுரேஷ் ஆடியோ வெளியீடு
தங்கம் கடத்தல் வழக்கில் முக்கிய குற்றவாளியான, ஸ்வப்னா சுரேஷ் நேற்று ஒரு ஆடியோ பதிவை வெளியிட்டார். அதில் முதல்வர் பினராயி விஜயனின் தூதுவராக ஷாஜ் கிரண் என்பவர் ஸ்வப்னா சுரேஷடன் பேசிய உரையாடல் பதிவாகியுள்ளது. இது குறித்து ஸ்வப்னா சுரேஷ் கூறியதாவது:
நான் யாருடன் விளையாடுகிறேன் என தெரியுமா என்று ஷாஜ் கிரண் மிரட்டல் விடுக்கிறார். தங்கம் கடத்தல் வழக்கில் முதல்வரின் மகளின் பெயரை இழுத்தால், அவரால் தாங்கி கொள்ள முடியாது என்றும் தெரிவித்தார். முதல்வர் குடும்பத்துக்கு எதிராக நான் அளித்த 164 ரகசிய வாக்குமூலங்களை திரும்ப பெற வேண்டும் என ஷாஜ் கிரண் வற்புறுத்துகிறார். அதற்கு இந்த ஆடியோதான் சாட்சி. அவர் சொன்னபடி நான் கேட்காவிட்டால், எனது ஆபாச வீடியோக்களை வெளியிடுவதாக ஷாஜ் கிரண் மிரட்டல் விடுக்கிறார். ஷாஜ் கிரண் தன்னுடன் இருந்தபோது, ஏடிஜிபி விஜிலென்ஸ் அஜித் குமார், சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி விஜய் சாக்கரே ஆகியோர் ஷாஜ் கிரண் வாட்ஸ் அப்பில் 56 முறை பேசினர்.
இவ்வாறு ஸ்வப்னா சுரேஷ் கூறுகிறார். ஆனால், இந்த குற்றச்சாட்டுகளை ஷாஜ் கிரன் மறுத்துள்ளார். இந்த ஆடியோ பதிவை கேட்டால், ஸ்வப்னா சுரேஷிடம் ஷாஜ் கிரண் மிதமான பாணியில் மிரட்டுவது போல் உள்ளது.