திருப்பதி மாடவீதியில் செருப்பு அணிந்த சர்ச்சை : மன்னிப்பு கேட்ட விக்னேஷ் சிவன்
6 ஆண்டுகளாக காதல் ஜோடிகளாய் சுற்றி வந்த நடிகை நயன்தாரா – இயக்குனர் விக்னேஷ் சிவன் ஜோடி நேற்று முன்தினம் திருமணம் செய்து கொண்டனர். மகாபலிபுரத்தில் ஒரு ஹோட்டலில் மிக பிரம்மாண்டமாக நடந்த இந்த திருமணத்தில் ரஜினிகாந்த், ஷாரூக்கான் உள்ளிட்ட பல திரையுலக பிரபலங்கள் பங்கேற்றனர்.
திருமணம் ஆன மறுநாளே நேற்று திருப்பதியில் இருவரும் வழிபாடு நடத்தி உள்ளனர். பட்டு – வேஷ்டி சட்டையில் விக்னேஷ் சிவனும், மஞ்சள் நிற பட்டுப்புடவையில் நயன்தாரா என இருவரும் பாரம்பரிய உடையை அணிந்து வந்து வழிபாடு நடத்தினர். தொடர்ந்து கோயில் வளாகத்தில் போட்டோ ஷூட்டும் இந்த ஜோடி எடுத்துள்ளனர். அப்போது நயன்தாரா காலில் செருப்பு அணிந்துள்ளார். கோயிலின் நான்கு மாட வீதியில் செருப்பு அணியக்கூடாது என கோயில் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதை இவர்கள் மீறியதால் இந்த விஷயம் சர்ச்சையானது.
இந்த விவகாரத்தில் நயன்தாரா – விக்னேஷ் சிவன் மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என திருப்பதி தேவஸ்தானம் சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தங்களது செயலுக்காக மன்னிப்பு கோரி உள்ளார் விக்னேஷ் சிவன்.
இதுதொடர்பாக திருப்பதி கோயில் அதிகாரிகளுக்கு அவர் எழுதி உள்ள மன்னிப்பு கடிதத்தில் கூறியிருப்பதாவது : ‛‛திருமணம் முடிந்த மறுநாள் வீட்டிற்கு கூட செல்லாமல் நேராக திருப்பதி தேவஸ்தானம் கோயிலுக்கு வந்து கல்யாண உற்சவத்தில் கலந்து கொண்டோம். பின்னர் போட்டோஷூட் எடுக்கும் போது அவசரம் காரணமாக நானும், நயன்தாராவும் அணிந்திருந்ததை உணரவில்லை. கடவுளை எந்த அவமரியாதையும் செய்யவில்லை. எனினும் எங்களது செயலால் பக்தர்கள் மனம் புண்பட்டிருந்தால் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு தெரிவித்துள்ளார்.