கடந்த சில ஆண்டுகளாகவே முகநூலில் பிரபலமாக இருக்கும், குறிப்பிட்ட சிலரின் கணக்குகளில் இருக்கும் படங்களை எடுத்து அதனை வைத்து, அவரது பெயரிலேயே புதிய கணக்குத் தொடங்கி, மெசேஞ்சரில் தகவல் அனுப்பி பணம் பறிப்பதையே வாடிக்கையாகக் கொண்டு ஒரு கும்பல் செயல்பட்டு வருகிறது. அரசுத்துறை அதிகாரிகள் தொடங்கி, காவல்துறை அதிகாரிகள் வரை பலரின் புகைப்படங்களையும் பயன்படுத்தி பணப் பறிப்பில் ஈடுபட்டிருக்கின்றனர். சம்மந்தப்பட்டவர்கள் மறுபதிவு போடுவதற்கு முன்பு கிடைக்கும் பணத்தை சுருட்டிக்கொள்ளும் அந்தக் கும்பல், அந்த வரிசையில் தற்போது, வாட்ஸ் அப்பில் கிப்ட் கார்டு அனுப்பி பணம் பறிப்பில் ஈடுபட ஆரம்பித்திருக்கிறது. அதுவும், மாவட்ட ஆட்சியரின் படத்தைப் பயன்படுத்தியே, வாட்ஸ் அப்பில் மோசடியில் ஈடுபட முயற்சித்திருப்பது தான் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
அறந்தாங்கி வருவாய் கோட்டாட்சியருக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு வாட்ஸ்அப்பில் மாவட்ட ஆட்சியரின் புகைப்படம் டி.பி ஆக வைக்கப்பட்டு, குறுஞ்செய்தி ஒன்று அனுப்பப்பட்டிருக்கிறது. அதில், தான் அமேசான் நிறுவனத்தில் இருந்து பேசுவதாகவும், உங்களுக்கு அமேசான் நிறுவனம் வவுச்சருடன், கீப்ட்-கார்டு வழங்கப்படுவதாகவும், அதனை குறிப்பிட்ட பணம் செலுத்தி பெற்றுக்கொள்ளுமாறு, அனுப்பப்பட்டிருக்கிறது. சந்தேகம் அடைந்த வருவாய் கோட்டாட்சியர், மாவட்ட ஆட்சியரைத் தொடர்பு கொண்டு தெரிவித்துள்ளார். இதைக்கேட்ட அதிர்ச்சியான ஆட்சியர், உடனே மாவட்ட எஸ்.பி நிஷா பார்த்திபனிடம் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில், சைபர்-கிரைம் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
போலீஸாரின் முதல் கட்ட விசாரணையில், குறுஞ்செய்தி அனுப்பிய நபர், மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த ஆகாஷ் என்பது தெரியவந்திருக்கிறது. இதையடுத்து, சம்மந்தப்பட்ட நபரை கைது செய்யும் முயற்சியிலும் போலீஸார் ஈடுபட்டு வருகின்றனர்.
இதற்கிடையே தான், அந்த நபர் மாவட்ட ஆட்சியர் கவிதா ராமுவின் அதிகாரப்பூர்வ எண்ணையே தொடர்புகொண்டு, தான் மாவட்ட ஆட்சியர் என்று ஆள்மாறாட்டம் செய்து வாட்ஸ் அப்பில் மெசேஜ் செய்து ஆட்சியருக்கே அதிர்ச்சி கொடுத்திருக்கிறார். சுதாரித்துக் கொண்ட ஆட்சியரோ, அப்படி யாரையும் எனக்குத் தெரியாது, அவர் யார் என்று கேட்டு பதில் அனுப்பியிருக்கிறார். உடனே, சுதாரித்துக் கொண்ட அந்த நபர் வாட்ஸ்அப் படத்தை உடனே மாற்றியிருக்கிறார்
மேலும், இதே போல், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணிபுரியும் மற்ற ஊழியர்களுக்கும் அனுப்பப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. இதற்கிடையே தான், மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு தனது முகநூலை, “என்னை யாருன்னு தெரியலைன்னு, என்னையவே சொல்ல வச்சுட்டாங்க. எனவே, இது மிகவும் தீவிரமான ஒன்று. எனவே, அலுவலக ஊழியர்கள் நண்பர்கள் எச்சரிக்கையாக இருங்கள்” என்று பதிவிட்டிருக்கிறார்.
மாவட்ட ஆட்சியரைப் போல, போலி கணக்கு ஆரம்பித்து பலரிடமும் மோசடியில் ஈடுபட முயன்ற சம்பவம் புதுக்கோட்டையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.