ஒடிசா-வின் பரதீப்பில் இருந்து சம்பல்பூருக்கு எரிபொருள் டேங்கர் லாரி சென்றுள்ளது. இந்த லாரியை நயக்கர் பகுதியை சேர்ந்த பங்கஜ் நயாஜ் ஓட்டிவந்துள்ளார். இவருக்கு உதவியாளராக திபு கதுவா என்பவரும் சென்றுள்ளார். இந்த நிலையில் எரிபொருள் நிரம்பிய லாரி அதிகாலை 1:45 மணியளவில் குசுமி ஆற்றின் பாலத்தில் சென்றுகொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து வாகனம் பாலத்தின் தடுப்பு சுவரில் மோதி, குசுமி ஆற்றில் விழுந்துள்ளது. சத்தம் கேட்டு உள்ளூர் வாசிகள் ஓட்டுநரையும் அவரின் உதவியாளரையும் மீட்க முயன்றுள்ளனர்.
அப்போது திடீரென எரிபொருள் நிரம்பிய டேங்கர் எதிர்பாராத விதமான வெடித்தது. இதில் சம்பவ இடத்திலேயே ஓட்டுநர் பங்கஜ் நயாஜ், உதவியாளர் திபு கதுவா மற்றும் உள்ளூர் வாசிகள் சமீர் நாயக், சந்தன் கதுவா ஆகியோர் உயிரிழந்தனர். அதைத் தொடர்ந்து அப்பகுதி மக்கள் விரைந்து வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர். விபத்து குறித்து தகவல் அறிந்த காவல்துறை மற்றும் தீயணைப்பு படையினரும் சம்பவ இடத்துக்கு வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர், அதைத் தொடர்ந்து அப்பகுதி மக்கள் உதவியுடன் இறந்தவர்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளது. அதிகாலை நேரத்தில் நடந்த இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.