கோவை மக்களுக்கு மூன்று ஆண்டுகளுக்கும் மேல் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த திருச்சி சாலையில் கட்டப்பட்டு வந்த மேம்பாலம் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இந்தப் பாலத்தின் தூரம் என்ன? எவ்வளவு கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ளது? மக்கள் மத்தியில் பாலத்திற்கான வரவேற்பு குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
தமிழ்நாட்டின் இரண்டாவது பெரிய நகரமாகவும் தமிழ்நாட்டின் தொழில்துறையின் தலைநகராகவும் விளங்கிவரும் கோவையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க பல்வேறு விதமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கோவையின் இரண்டு மிக முக்கிய பிரதான சாலைகளில் ஒன்று அவிநாசி சாலை, மற்றொன்று திருச்சி சாலை. இதில் திருச்சி சாலை, இரு முக்கிய பேருந்து நிலையங்களான சிங்காநல்லூர் மற்றும் உக்கடம் பேருந்து நிலையங்களுக்கு முக்கிய இணைப்பாக செயல்பட்டு வருகிறது. இந்த திருச்சி சாலையில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்ததை அடுத்து இங்கு மேம்பாலம் கட்ட வேண்டும் என மக்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்தனர்.
இதையடுத்து கடந்த 2019ஆம் ஆண்டு நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை சார்பில் இதற்கான பணிகள் தொடங்கப்பட்டது. பின்னர் கொரோனா அச்சுறுத்தல் ஏற்பட்டதை அடுத்து பாலப் பணிகள் தொய்வடைந்து. அதன் பின்னர் 2020 ஆண்டு ஜூன் மாதத்தில் மீண்டும் பணிகள் வேகப்படுத்தப்பட்டன.
இந்த நிலையில் பாலப் பணிகள் முழுவதும் நிறைவடைந்ததை அடுத்து சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி காட்சி வாயிலாக முதலமைச்சர் ஜூன் 11ஆம் தேதி திறந்து வைத்தார். இதன் திறப்பு விழா நிகழ்ச்சியில் அமைச்சர் செந்தில் பாலாஜி, கோவையைச் சேர்ந்த எம்எல்ஏக்கள் மற்றும் எம்பிக்கள், மேயர், மாநகராட்சி ஆணையர், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அமைச்சர் செந்தில் பாலாஜி பச்சைக்கொடி அசைத்து பாலத்தின் பயன்பாட்டை துவக்கி வைத்தார். இதையடுத்து வாகன ஓட்டிகளுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.
கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்ற இந்தப் பாலத்தின் மொத்த நீளம் 3.15 கிலோமீட்டர். அகலம் 17.20மீட்டர். பாலத்தின் மொத்த கண்கள் 119. அவற்றில் பிரதான பாலத்தின் கண்கள் 111. சுங்கம் பகுதியில் உள்ள இறங்கு தளத்தில் உள்ள கண்கள் 8. செலவிடப்பட்ட மொத்த தொகை ரூ. 238.88கோடி.
இந்த திருச்சி சாலை மேம்பாலத்தின் மூலம் ராமநாதபுரம் மற்றும் சிங்கம் பகுதியில் உள்ள இரண்டு சிக்னல்களில் நீண்ட நேர காத்திருப்பை வாகன ஓட்டிகள் தவிர்க்க இயலும். மேலும் ரயில் நிலையம் அரசு அலுவலகங்கள் அரசு மருத்துவமனை உள்ளிட்டவற்றுக்கு செல்வோர் வழக்கமாக எடுத்துக்கொள்ளும் நேரத்தைவிட மிக விரைவாக செல்ல முடியும் என்பது இப்பாலத்தின் முதன்மை பயன். மேலும் சுங்கம் பகுதியில் இறங்கு தளம் அமைக்கப்பட்டுள்ளதால் பொள்ளாச்சி, கேரளா, விக்ரம் பேருந்து நிலையம் செல்வோருக்கு மிகுந்த பயனுள்ளதாக இது அமைந்துள்ளது.
மிக நீண்ட எதிர்பார்ப்பிற்கு பிறகு இந்த பாலம் திறக்கப்பட்டுள்ளது மிகுந்த உற்சாகத்தையும் மகிழ்ச்சியும் கொடுத்துள்ளதாக கோவைவாசிகள் தெரிவித்துள்ளனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM