சென்னை மாநகராட்சியில் உருவாக்கப்பட்ட சாலையோர விற்பனைக் குழுக்கள் கலைப்பு

சென்னை: சென்னை மாநகராட்சியில் உருவாக்கப்பட்ட சாலையோர விற்பனைக் குழுக்கள், உயர் நீதிமன்ற உத்தரவின்படி கலைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தெருவோர வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக தெருவோர வியாபாரிகள் வாழ்வாதார பாதுகாப்பு மற்றும் சாலையோர வியாபாரம் முறைப்படுத்துதல் சட்டத்தை கடந்த 2014-ம் ஆண்டு மத்திய அரசு இயற்றியது. இதனைப் பின்பற்றி தமிழ்நாடு அரசு 2015-ம் ஆண்டு தெரு வியாபாரிகள் வாழ்வாதார பாதுகாப்பு மற்றும் தெருவோர வியாபாரம் முறைப்படுத்துதல் விதிகளை உருவாக்கியது.

இதன்படி, சென்னை தெருவோர வியாபாரிகளை கணக்கெடுக்கும் பணி நடந்தது. இதனைத் தொடர்ந்து தெருவோர வியாபாரிகள் சட்ட விதிகளின்படி, சாலையோர விற்பனைக் குழுக்களை அமைக்க மாநகராட்சி நடவடிக்கை எடுத்தது. இதன்படி அனைத்து மண்டலங்களிலும்சாலையோர விற்பனைக் குழு தேர்தல் முடிந்து உறுப்பினர்கள் தேர்தெடுக்கப்பட்டனர்.

இந்த விற்பனைக் குழுவின் தலைவராக மண்டல அதிகாரி செயல்பட்டார். மண்டல செயற்பொறியாளர், இரு காவல் துறை அதிகாரிகள், என்ஜிஓ மற்றும் குடியிருப்போர் நலச்சங்கத்தை சேர்ந்தவர்கள் நியமன உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டனர். இதை தவிர்த்து தெருவோர வியாபாரிகள் 6 பேர் தேர்தல் மூலமாக தேர்வு செய்யப்பட்டனர். இதன்படி தேர்தல் நடந்து 15 தொகுதிகளிலும் விற்பனைக் குழு அமைக்கப்பட்டது.

இதன்பிறகு அனைத்து மண்டலங்களிலும் விற்பனைக் குழு கூட்டம் நடந்தது. கூட்டத்தில் சம்பந்தப்பட்ட மண்டலத்தில் எந்த பகுதிகளில் தெருவோர வியாபாரிகளுக்கான விற்பனை மண்டலம் அமைப்பது தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டது. இக்குழுக்கள் மூலம் மண்டல வாரியாக மொத்தம் 905 இடங்கள் சாலையோர வியாபாரம் அனுமதிக்கப்பட்ட பகுதிகளாகவும், 4,700 இடங்கள் சாலையோர வியாபாரம் தடை செய்யப்பட்ட பகுதிகளாகவும் அறிவிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், சென்னையில் அமைக்கப்பட்ட சாலையோர விற்பனை குழுக்கள் கலைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை மாநகராட்சியில் அமைக்கப்பட்ட நகர விற்பனைக் குழுக்களை ரத்து செய் உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரித்த தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு, சென்னையில் அமைக்கப்பட்ட நகர விற்பனை குழுக்கள் சட்ட விரோதம் என்று உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவின்படி சென்னை அமைக்கப்பட்ட சாலையோர விற்பனைக் குழுக்கள் அனைத்து கலைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.