வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
வாஷிங்டன்-மூன்று முறை கொரோனா அலை அடித்த பின்னும், இந்திய பொருளாதாரம் மீண்டு வலுவான வளர்ச்சியை எட்டி யுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
அமெரிக்க கருவூலத் துறை, பொருளாதார நிலவர அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:கொரோனா பாதிப்பிற்குப் பின், 2021ல் அமெரிக்க பொருளாதாரம் வலுவான மீட்சிப் பாதைக்கு திரும்பியுள்ளது. இதனால், அமெரிக்கா – இந்தியா இடையிலான பரஸ்பர சரக்கு மற்றும் சேவைகள் துறையின் உபரி வர்த்தகம், 3 லட்சத்து 37 ஆயிரம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இது, 2020ல், 2 லட்சத்து 55 ஆயிரம் கோடி ரூபாயாக இருந்தது. கொரோனா பரவல் காரணமாக இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி, 2020ல், 7 சதவீதம் பின்னடைவை கண்டிருந்தது. கடந்த, 2021 மத்தியில் கொரோனா இரண்டாவது அலையால் இந்திய பொருளாதாரம் மீண்டு வருவது தாமதமானது.
இந்த காலகட்டத்தில், இந்தியா கொரோனா தடுப்பூசி திட்டத்தை தீவிரமாக செயல்படுத்தியது. கடந்த, 2021 இறுதிக்குள் இந்திய மக்கள் தொகையில், 44 சதவீதம் பேருக்கு இரண்டு ‘டோஸ்’ தடுப்பூசி செலுத்தப்பட்டது. இத்தகைய நடவடிக்கைகளால், 2021 ஜூலை – டிச., வரையிலான அரையாண்டில், இந்திய பொருளாதார வளர்ச்சி, கொரோனாவுக்கு முந்தைய நிலையை எட்டியது.
இதனால், 2021ல் இந்திய பொருளாதாரம் வலுப்பெற்று, 8 சதவீத வளர்ச்சியை எட்டியது.கொரோனா பரவல் காலத்தில் இந்தியா செயல்படுத்திய ஊக்கச் சலுகை திட்டங்களும் பொருளாதார வளர்ச்சிக்கு துணை புரிந்தன. இந்தாண்டு துவக்கத்தில் கொரோனாவின் உருமாறிய ‘ஒமைக்ரான்’ வைரசின் மூன்றாவது அலையால் இந்தியா பாதிக்கப்பட்டது.எனினும், அதிகமானோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டதால், இறப்பு விகிதமும், பொருளாதார சரிவும் கட்டுப்படுத்தப்பட்டது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Advertisement