வாஷிங்டன்: கரோனா பெருந்தொற்று பரவல் 3-வது அலை வீசிய பிறகும் இந்தியப் பொருளாதாரம் மிகவும் வலிமையுடன் உள்ளதாக அமெரிக்க நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தாக்கல் செய்த அறிக்கையில் இந்தத் தகவல் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தியாவில் கரோனா பரவல் 2-வது அலை தீவிரமான பாதிப்பை 2021 மத்தியில் ஏற்படுத்தியது. இதனால் பொருளாதார மீட்சி தாமதமானதாக அரையாண்டு அறிக்கையில் சுட்டிக் காட்டியுள்ளது.
எனினும் கடந்த ஆண்டின் இரண்டாம் பாதியில் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டன. இதனால் பொருளாதார மீட்சி சாத்தியமானது என்று குறிப்பிட்டுள்ளது. அதேபோல இந்தியா மேற்கொண்ட தடுப்பூசி பணிகளை அமெரிக்க நிதி அமைச்சகம் வெகுவாக பாராட்டியுள்ளது. இதனால் 2021-ம் ஆண்டில் 8 சதவீத வளர்ச்சி எட்டப்பட்டது என்றும் குறிப்பிட்டுள்ளது.
இந்த ஆண்டு தொடக்கத்தில் ஒமைக்ரான் வகை வைரஸ் பரவத் தொடங்கினாலும், உயிரிழப்பு அதிகரிக்கவில்லை. பொருளாதார நடவடிக்கைகளும் பாதிக்கவில்லை என்றும் சுட்டிக் காட்டியுள்ளது.
கரோனா பாதிப்பிலிருந்து மீள்வதற்கு வசதியாக இந்திய அரசும் பல்வேறு நிதி உதவிகளை செய்தது. இதனால் 2021-ம் நிதி ஆண்டில் வளர்ச்சி நிதிப் பற்றாக்குறை 6.9 சதவீதமாக உயர்ந்தது. இது கரோனா பெருந்தொற்று காலத்தில் இருந்த பற்றாக்குறை அளவைவிட மிக அதிகமாகும்.
அதேசமயம் இந்திய ரிசர்வ் வங்கியும் நிதிக் கொள்கை வகுப்பதில் சிறப்பாக செயல்பட்டு வந்தது. 2020 மே மாதம் நான்கு சதவீதமாக இருந்த வட்டி விகிதத்தை உயர்த்தாமல் தொடர்ந்து பணப்புழக்கத்துக்கு வழி வகுத்தது. 2020-ம் ஆண்டில் ஜிடிபியில் உபரி 1.3 சதவீதமாக இருந்தது. இது 2004-ம் ஆண்டுக்குப் பிறகு அப்போதுதான் எட்டப்பட்டது. 2021-ம் நிதி ஆண்டில் நடப்புக் கணக்கு பற்றாக்குறை 1.1 சதவீதமாக இருந்தது.
வர்த்தகப் பற்றாக்குறை காரணமாக நடப்புக் கணக்கு பற்றாக்குறை அதிகரித்தது. 2021-ம் ஆண்டு பற்றாக்குறை 17,700 கோடி டாலரை தொட்டது. முந்தைய நிதிஆண்டில் பற்றாக்குறை 9,500 கோடி டாலராக இருந்தது குறிப்பிடத்தக்கது.
பொருளாதார மீட்சி காரணமாக 2021 பிற்பாதியில் இறக்குமதி அதிகரித்தது. இதனால் இறக்குமதி 54 சதவீதம் அதிகரித்தது. ஏற்றுமதியும் கணிசமாக உயர்ந்தது. இது முந்தைய ஆண்டைக் காட்டிலும் 43 சதவீதம் அதிகமாக இருந்தது.
இந்தியாவின் சேவை வர்த்தகம் 3.3 சதவீதம் உபரியை எட்டியது. அதேபோல வருமான உபரி 1.3 சதவீதமாக இருந்தது. அந்நிய கரன்சி இந்தியாவுக்குள் வந்தது 5 சதவீதம் அதிகரித்து 8,700 கோடி டாலராக இருந்தது. இது ஜிடிபியில் 2.8 சதவீதமாகும்.
இந்தியா – அமெரிக்கா இடையிலான வர்த்தகம் மற்றும் சேவை வருமானம் உபரி ஏழு ஆண்டுகளில் 3,000 கோடி டாலராகும். தேவை அதிகரித்ததால் இந்தியாவிலிருந்து அதிக பொருள்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.