பீஜிங் : சீனா தலைநகர் பீஜிங்கில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதை அடுத்து, கட்டுப்பாடுகள் மீண்டும் அமலுக்கு வந்துள்ளன.
நம் அண்டை நாடான சீனாவில் தலைநகர் பீஜிங்கில் நேற்று கொரோனா வைரசால் புதிதாக, 61 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.இது குறித்து சீன அரசு செய்தி தொடர்பாளர் ஜூ ஹெஜியன் கூறியதாவது:பீஜிங்கில் கடந்த இரண்டு நாட்களாக மீண்டும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஒரே நாளில், 61 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதனால் கொரோனா பரவல் தடுப்பு நடைமுறைகளை பின்பற்றும்படி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஒரு மதுபான விடுதியில் இருந்து கொரோனா பரவியுள்ளது தெரியவந்துள்ளது.
இதனால் சாவோயங் உள்ளிட்ட இரண்டு பகுதிகளில் மீண்டும் கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளன.பீஜிங் நகரம் முழுதும் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்படவில்லை. எனினும் கொரோனா வேகமாக பரவும் என அஞ்சுவதால் மக்கள் கூட்டம் அதிகம் உள்ள இடங்களுக்கு செல்வதை தவிர்க்கும்படி பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பீஜிங்கில் சர்ச்சைக்குரிய மதுபான விடுதியுடன் தொடர்புடைய, 6,158 பேரிடம் விசாரணை நடத்தியுள்ளோம். அதில் இதுவரை, மொத்தம், 115 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது.இதற்கிடையே கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட ஷாங்காய் நகரில் அனைவருக்கும் தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
Advertisement