நாடு முழுவதும் 57 இடங்களுக்கான மாநிலங்களவை தேர்தல் நடந்து முடிந்தது. இதில் பாஜ 22 இடங்களையும், காங்கிரஸ் 9, திமுக, 3, அதிமுக 2 இடங்களை கைப்பற்றி உள்ளன. வாக்குப்பதிவு குளறுபடிகளால் மகாராஷ்டிரா, அரியானாவில் கடும் குழப்பத்திற்கு மத்தியில் நேற்று அதிகாலையில் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டன.நாடு முழுவதும் 15 மாநிலங்களில் காலியாகும் 57 மாநிலங்களவை எம்பிக்கள் பதவியிடங்களுக்கான தேர்தல் ஜூன் 10ம் தேதி நடக்கும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதில், தமிழகம் உட்பட 11 மாநிலங்களில் 41 எம்பிக்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். தமிழகத்தில் திமுக தரப்பில் 3 எம்பிக்களும், அதிமுக தரப்பில் 2 எம்பிக்களும் போட்டியின்றி தேர்வாகினர். இதைத் தொடர்ந்து, ராஜஸ்தான், அரியானா, கர்நாடகா, மகாராஷ்டிரா ஆகிய 4 மாநிலங்களில் 16 இடங்களுக்கு மட்டும் நேற்று முன்தினம் வாக்குப்பதிவு நடந்தது.இதில், ராஜஸ்தானில் 4 இடங்களில் காங்கிரஸ் 3, பாஜ 1 இடங்களில் வென்றது. பாஜ ஆதரவுடன் சுயேச்சையாக போட்டியிட்ட ஊடக நிறுவன உரிமையாளர் சுபாஷ் சந்திரா தோல்வி அடைந்தார். பாஜ எம்எல்ஏ ஷோபாராணி குஷ்பா கட்சி மாறி காங்கிரசுக்கு வாக்களித்தார். உடனடியாக அவரை பாஜ மேலிடம் சஸ்பெண்ட் செய்தது. கர்நாடகாவில் எதிர்பார்த்தைப் போலவே பாஜ 3, காங்கிரஸ் 1 இடங்களை கைப்பற்றியது. பாஜ தரப்பில் ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெற்றி பெற்றார். அதே சமயம் மதச்சார்பற்ற ஜனதா தளம் தோல்வியை சந்தித்தது. இம்மாநிலத்தில் மஜத எம்எல்ஏ. ஒருவர் காங்கிரசுக்கு கட்சி மாறி வாக்களித்தார். மகாராஷ்டிரா மற்றும் அரியானாவில், சில எம்எல்ஏக்கள் கட்சி மாறி ஓட்டு போட்டதால் அவர்களின் வாக்கை செல்லாததாக அறிவிக்கக் கோரி தேர்தல் அதிகாரிகளிடம் புகார் தரப்பட்டது. இதனால் வாக்கு எண்ணிக்கை நள்ளிரவு வரை நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.இதில், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தரப்பில் தரப்பட்ட அனைத்து புகார்களையும் தேர்தல் ஆணையம் நிராகரித்ததால் கடும் குழப்பம் நிலவியது. இறுதியில் அதிகாலை 2 மணிக்கு பிறகு அரியானா தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட்டன. இதில், காங்கிரஸ் எம்எல்ஏ ஒருவர் கட்சி மாறி பாஜ ஆதரவு சுயேச்சைக்கு வாக்களித்ததால், காங்கிரஸ் தரப்பில் நிறுத்தப்பட்ட மூத்த தலைவர் அஜய் மக்கான் தோல்வி அடைந்தார். முதலில் அவர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்ட சிறிது நேரத்தில், பாஜ 1 இடத்திலும், பாஜ ஆதரவுடன் களமிறங்கிய ஊடக உரிமையாளர் கார்த்திகேய சர்மாவும் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. அரியானாவில் 2 இடங்களுக்கு 3 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.இதே போல், மகாராஷ்டிராவிலும் கடும் குழப்பம் நிலவியதால் ஆளும் சிவசேனா, காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர்கள் வாக்குப்பதிவை ரத்து செய்ய தேர்தல் அதிகாரியிடம் புகார் அளித்தனர். ஆனால், அவற்றை தேர்தல் அதிகாரி நிராகரித்தார். இம்மாநிலத்திலும் அதிகாலையில் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டன. மகாராஷ்டிராவில் 6 இடங்களுக்கு பாஜ தரப்பில் 3, சிவசேனா 2, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் தலா 1 வேட்பாளர் என 7 பேர் போட்டியிட்டனர். இதில், பாஜ தரப்பில் ஒன்றிய அமைச்சர் பியூஸ் கோயல் உட்பட 3 பேரும், சிவசேனா தரப்பில் சஞ்சய் ராவத், காங்கிரஸ் தரப்பில் இம்ரான் பிரதாப்கர்ஹி, தேசியவாத காங்கிரஸ் தரப்பில் பிரபுல் படேல் ஆகியோர் வெற்றி பெற்றனர். சிவசேனா எம்எல்ஏக்கள் சிலர் கட்சி மாறி வாக்களித்ததாலும் சுயேச்சைக்கள் மொத்தமாக பாஜ பக்கம் சாய்ந்ததாலும், சிவசேனா கட்சியின் மற்றொரு வேட்பாளர் சஞ்சய் பவார் தோல்வி அடைந்தார்.இதன் மூலம், வாக்குப்பதிவு நடந்த 16 இடங்களுக்கான தேர்தலில் பாஜ 8 இடங்களை கைப்பற்றியது. மொத்தமுள்ள 57 இடங்களில் பாஜ 22 இடங்களைக் கைப்பற்றி உள்ளது. அதோடு, அரியானாவில் பாஜ ஆதரவு சுயேச்சை வெற்றி பெற்றுள்ளார். காங்கிரசுக்கு 9 இடங்கள் கிடைத்துள்ளன. மாநிலங்களவையில் கட்சிகளின் பலம்மாநிலங்களின் மொத்த உறுப்பினர்களின் 245. இதில் 12 பேர் நியமன உறுப்பினர்கள். மீதமுள்ள 233 உறுப்பினர்கள் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். இதில் அதிகபட்சமாக பாஜவுக்கு 92 எம்பிக்கள் உள்ளனர். காங்கிரசுக்கு 31 எம்பிக்களும், திரிணாமுல் காங்கிரசுக்கு 13, திமுகவுக்கு 10 எம்பிக்கள் உள்ளனர்.பாஜ கூட்டணி – 109காங். கூட்டணி – 53பிற கட்சிகள் – 71மாநிலங்களவையில் மசோதாக்களை நிறைவேற்ற 123 எம்பிக்கள் ஆதரவு தேவை. தற்போது பாஜ கூட்டணிக்கு போதிய பெரும்பான்மை இல்லாததால், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் உள்ளிட்ட பிற கட்சிகளின் ஆதரவுடன் மசோதாக்களை நிறைவேற்றி வருகிறது.கட்சி மாறி வாக்களித்த காங். எம்எல்ஏ நீக்கம்அரியானாவில் காங்கிரஸ் எம்எல்ஏ குல்தீப் பிஷ்னாய் கட்சி மாறி வாக்களித்ததால், காங்கிரசின் மூத்த தலைவர் அஜய் மக்கான் தோல்வியை சந்தித்தார். இதன் காரணமாக, குல்தீப் பிஷ்னாய் காங்கிரஸ் காரிய கமிட்டியின் சிறப்பு அழைப்பாளர் உட்பட கட்சியின் அனைத்து பொறுப்பிலிருந்தும் நீக்கப்படுவதாக காங்கிரஸ் கட்சி நேற்று அறிவித்தது. விரைவில் பிஷ்னாய் சஸ்பெண்ட் செய்யப்பட இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. அரியானாவில் காங்கிரசுக்கு 31 எம்எல்ஏக்கள் உள்ள நிலையில், மற்றொரு காங்கிரஸ் எம்எல்ஏ ஓட்டு செல்லாததாக அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.பாஜவுக்கு ஆதரவாகதேர்தல் ஆணையம்சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத் நேற்று அளித்த பேட்டியில், ‘‘சிவசேனா எம்எல்ஏ சுகாஸ் கந்தேவின் வாக்கு பதிவு நிராகரிக்கப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையத்தின் இந்த நடவடிக்கையால், பாஜவுக்கு ஆதரவாக முடிவுகள் வந்துள்ளன. எங்களுடைய ஒரு வாக்கை தேர்தல் ஆணையம் செல்லாத வாக்காக்கி உள்ளது. ஆனால், நாங்கள் இரண்டு வாக்குகளுக்கு எதிராக புகார் கூறினோம். அதன் மீது எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. பாஜவுக்கு ஆதரவாக தேர்தல் ஆணையம் செயல்பட்டு இருக்கிறது,’’ என்றார்.பாஜ பலம் சரிவுபாஜ மாநிலங்களவை எம்பிக்கள் 25 பேரின் பதவிக்காலம் அடுத்த மாதத்துடன் முடியும் நிலையில், அவர்களில் 20 இடங்களை மட்டுமே அக்கட்சியால் தக்க வைக்கும் நிலை இருந்தது. கைவசமுள்ள எம்எல்ஏக்கள் அடிப்படையில், தேர்தல் நடந்த 57 மாநிலங்களவை இடங்களில் பாஜவுக்கு 20 இடங்கள் மட்டுமே கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், பாஜ கூடுதலாக 2 இடங்களுடன் 22 இடங்களை கைப்பற்றி உள்ளது. அதோடு, பாஜ ஆதரவு சுயேச்சை வேட்பாளர் கார்த்திகேய சர்மா அரியானாவில் வென்றுள்ளார். இதன் மூலம், அடுத்து நடக்க உள்ள ஜனாதிபதி தேர்தலில் பாஜவின் கை ஓங்கி உள்ளது. அதே சமயம், மாநிலங்களவையில் பாஜவின் முந்தையை எண்ணிக்கையை காட்டிலும் தற்போது சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த தேர்தலுக்கு முன் மாநிலங்களவையில் பாஜவின் பலம் 95 ஆக இருந்த நிலையில் தற்போது 92 ஆக சரிந்துள்ளது. காங்கிரசின் பலம் 29ல் இருந்து 31 ஆக அதிகரித்துள்ளது.