ஆந்திராவில் துணிக்கடை உரிமையாளரின் மகனை 50 லட்ச ரூபாய் கேட்டு கடத்திய நபர்கள் 4 மணி நேரத்தில் பிடிபட்டனர்.
அனந்தபுரம் மாவட்டம் சாரதா நகரைச் சேர்ந்த பாபாவலி என்பவரின் 9 வயது மகன் சூரஜை வெள்ளிக்கிழமை மாலை அவரது வீட்டில் இருந்து மர்ம நபர்கள் கடத்திச் சென்றனர். கடத்தல் காரர்கள் 50 லட்சம் ரூபாய் பணம் தராவிட்டால் சிறுவனைக் கொன்று விடுவதாக மிரட்டியதும் பாபாவலி போலீசில் புகார் அளித்தார்.
இதையடுத்து “High Alert” என்ற மொபைல் செயலி மூலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து போலீசாருக்கும் எச்சரிக்கை செய்யப்பட்டது.
கடத்தல்காரர்களின் செல்போன் சிக்னல் அவர்களின் இருப்பிடத்தைக் காட்டிக் கொடுத்தது. சிறுவனைக் கடத்திய 2 பேரைக் கைதுசெய்து போலீசார் நடத்திய விசாரணையில், அவர்கள் பாபாவலியிடம் ஏற்கனவே பணிபுரிந்தவர்கள் என்பது தெரிய வந்தது.