நியூயார்க் : ஐ.நா.,வின் மின்னணு தொழில்நுட்ப துாதராக, இந்தியாவின் மூத்த துாதரக அதிகாரியான அமன்தீப் சிங் கில் நியமிக்கப்பட்டுள்ளார்.
பஞ்சாப் பல்கலை.,யின் மின்னணு தொழில்நுட்ப பட்டதாரியான அமன்தீப் சிங் கில், லண்டன் கிங்ஸ் கல்லுாரியில் அணுவியல் துறையில் முனைவர் பட்டம் பெற்றவர்.ஐ.நா.,வின் சர்வதேச மின்னணு சுகாதாரம் மற்றும் செயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சி கூட்டுறவு திட்டத்தின் தலைமை செயல் அதிகாரியாக தற்போது உள்ளார். கடந்த, 1992 முதல் இந்திய துாதரகத்தில் பல்வேறு பொறுப்புகளை வகித்த அமன்தீப், ஈரான், இலங்கை ஆகிய நாடுகளிலும் பணியாற்றியிருக்கிறார்.
இவர், 2018 – 19ல் மின்னணு தொழில்நுட்ப ஒத்துழைப்பு தொடர்பான ஐ.நா., பொதுச் செயலரின் உயர்மட்டக் குழுவின் இணை தலைவராக செயல்பட்டார். இந்நிலையில், அமன்தீப்பை ஐ.நா., பொதுச் செயலர், அன்டோனியோ குட்டரஸ், சர்வதேச மின்னணு தொழில்நுட்ப துாதராக நியமித்துள்ளார்.’மின்னணு தொழில்நுட்பத்தில் ஆழ்ந்த அறிவாற்றல் உள்ள அமன்தீப் சிங் கில், மின்னணு தொழில்நுட்ப பயன்பாட்டை பரவலாக்கி, ஸ்திரமான வளர்ச்சி இலக்குகளை அடைய துணை புரிவார்’ என, ஐ.நா., வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement