மத்தியப் பிரதேச மாநிலம், போபாலில் உள்ள டிடி நகரில் வசிப்பவர் சங்கமித்ரா. டாக்டர் ஒருவரிடம் உதவியாளராகப் பணியாற்றும் சங்கமித்ரா, தன் கணவருடன் அருகில் உள்ள மார்க்கெட்டிற்குச் சென்றார். மார்க்கெட்டில் அந்தப் பெண்ணின் கணவர் அருகில் சென்று தண்ணீர் வாங்க சென்றார். அந்நேரம் அங்குவந்த சிலர், பைக் அருகில் நின்று கொண்டு அந்தப் பெண்ணை கிண்டல் செய்து பேசியதாகத் தெரிகிறது. இதனால் அந்தப் பெண் அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். ஒருகட்டத்தில் கோபத்தில் அந்தப் பெண் அவர்களில் ஒருவனை அடித்துவிட்டார். உடனே மார்க்கெட்டில் மக்கள் கூட்டம் கூடியது. இதனால் அந்தப் பெண்ணுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நபர்கள் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டனர். பின்னர் அவர் தன் கணவருடன் வீட்டிற்கு புறப்பட்டு சென்றார்.
ஆனால், அவர்கள் இரண்டு பேரையும் அடிப்பட்டவர்களில் ஒருவன் பைக்கில் பின் தொடர்ந்து சென்றிருக்கிறான். ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் அவர்களை மடக்கியவன், தன்னிடம் இருந்த பிளேடால் சங்கமித்ராவை முகத்தில் தாக்கிவிட்டு தப்பி ஓடிவிட்டான். இதில் சங்கமித்ராவிற்கு நெற்றி உட்பட முகத்தின் பல இடங்களில் காயம் ஏற்பட்டது. உடனே மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சங்கமித்ராவிற்கு டாக்டர்கள் 118 தையல்கள் போட்டிருக்கின்றனர்.
இது குறித்து போலீஸில் புகார் செய்யப்பட்டுள்ளது. போலீஸார் இரண்டு பேர்மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். இது குறித்து துணை போலீஸ் கமிஷனர் சாய் கிருஷ்ணா, `குற்றவாளிகள் விரைவில் கைதுசெய்யப்படுவார்கள்’ என்று தெரிவித்தார். பட்டப்பகலில் நடந்த இந்தச் சம்பவம் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.