650 ஆண்டுகளுக்கு முன் கடலால் மூழ்கடிக்கப்பட்ட இங்கிலாந்து நகரம் கண்டுபிடிப்பு

லண்டன்,

இந்தியாவில் வர்த்தகம் செய்ய வந்து பின்னர் காலனி ஆதிக்க நாடுகளில் ஒன்றாக மாறிய இங்கிலாந்து நாட்டில் கடலோர பகுதியில் பல நூற்றாண்டுகளுக்கு முன் வாணிபம் செழித்து வளர்ந்தது.

இவற்றில் கிழக்கு யார்க்ஷைர் நகர பகுதியில் இருந்து ஒரு மைல் தொலைவில் அமைந்த ரேவன்சர் ஓட் என்ற துறைமுக நகரும் ஒன்று. தற்போது அந்நாட்டில் உள்ள ஹல் என்ற துறைமுகம் அமைந்த நகரை விட இது அதிக முக்கியத்துவம் வாய்ந்தது.

13ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் மீன்பிடி படகுகள் மற்றும் சரக்கு கப்பல்கள் நிறுத்தி வைக்கும் பெரிய நகரம் ஆக திகழ்ந்துள்ளது. இதன் கடலோர பகுதியில் அந்த காலத்தில் 100க்கும் மேற்பட்ட வீடுகள் இருந்துள்ளன.

கப்பல்களை கரையோரம் கட்டி நிறுத்தி வைப்பதற்கான நடைமேடைகள் மற்றும் விற்பனை பொருட்களை வைத்திருக்கும் பண்டகசாலைகள் உள்ளிட்டவையும் இருந்துள்ளன.

1299ம் ஆண்டு வரை செழித்து வளர்ந்த கடலோர நகராக அது இருந்து வந்துள்ளது. ஆனால், 13ம் நூற்றாண்டின் மத்தியில், கடலால் இந்நகரம் மூழ்கடிக்கப்பட்டு பல நூற்றாண்டுகளாக நீருக்குள் மூழ்கியுள்ளது.

கடந்த 650 ஆண்டுகளாக இந்நகரை யாரும் காண முடியவில்லை. பல ஆண்டுகளாக அதன் இருப்பிடம் பற்றி அறிய விஞ்ஞானிகள் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

இதன் பலனாக, சமீபத்திய தேடுதலில் நீரின் மேற்பரப்புக்கு சில மீட்டர்கள் அடியில் பாறைகள் மற்றும் கற்களால் ஆன கட்டிடங்கள் தெரிந்துள்ளன.

இதற்கு முன்பிருந்த ஆராய்ச்சியாளர்கள் தவறான இடங்களில் அதனை தேடி வந்த நிலையில், இந்நகரம் நூற்றாண்டு காலம் ஆக கண்டறியப்படாமலேயே இருந்துள்ளது என நிபுணர்கள் கூறியுள்ளனர்.

இதற்காக ஹல் பல்கலை கழகத்தின் புவிஅறிவியல் ஆராய்ச்சியாளரான பேராசிரியர் டான் பார்சன்ஸ் தலைமையிலான குழு நவீன உபகரணங்கள் மற்றும் தொழில்நுட்ப உதவியுடன் அந்த பகுதிக்கு சென்று நகரத்தின் சுவடுகளை கண்டறியும் நம்பிக்கையில் உள்ளனர்.

அந்நகரின் அடித்தளம், துறைமுகம் மற்றும் கடல் அரிப்பு ஏற்படாமல் தடுக்கும் வகையில் கட்டப்பட்ட கடல்சுவர்கள் ஆகியவற்றை கண்டறிந்த பின்னர் அவற்றை ஒழுங்குபடுத்தி 3டி வடிவிலான வரைபடம் ஒன்றை உருவாக்க உள்ளனர்.

இந்த நகரை கண்டறிவதற்காக தனது வாழ்வின் 25 ஆண்டுகளை அர்ப்பணித்த பில் மதிசன் கூறும்போது, மிக நீண்ட காலத்திற்கு பின்பு உண்மையில் இதனை கண்டறிந்தது வாழ்க்கையின் பெரிய பணி நிறைவுற்றது போன்று உள்ளது. இதனால், நான் திக்குமுக்காடி போயுள்ளேன் என மகிழ்ச்சி பொங்க தெரிவித்து உள்ளார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.