தென்ஆப்பிரிக்காவுக்கு பதிலடி கொடுக்குமா இந்தியா? 2-வது போட்டி இன்று நடக்கிறது

கட்டாக்,

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் டெல்லியில் நடந்த தொடக்க ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்கா 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்த நிலையில் இந்தியா – தென்ஆப்பிரிக்கா இடையிலான 2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஒடிசா மாநிலம் கட்டாக்கில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது.

லோகேஷ் ராகுல் காயத்தால் விலகியதால் கடைசிநேரத்தில் இந்திய அணியின் கேப்டன் பொறுப்பை முதல்முறையாக ஏற்ற ரிஷப் பண்ட் முதல் ஆட்டத்தில் கேப்டன்ஷிப்பில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. பேட்டிங்கில் அமர்க்களப்படுத்திய இந்திய அணியினர் 211 ரன்கள் திரட்டினர். இஷான் கிஷன் 76 ரன்கள் விளாசினார். ஆனால் அந்த இலக்கையும் தென்ஆப்பிரிக்கா 5 பந்து மீதம் வைத்து சர்வசாதாரணமாக எடுத்து விட்டது. டேவிட் மில்லர், வான்டெர் டஸன் அரைசதம் அடித்து தங்கள் அணியின் வெற்றிக்கு உதவினர்.

பந்துவீச்சில் மாற்றம்?

இந்திய பவுலர்கள் புவனேஷ்வர்குமார், ஹர்ஷல் பட்டேல், அக்‌ஷர் பட்டேல், அவேஷ்கான் உள்ளிட்டோர் ரன்களை வாரி வழங்கினார்களே தவிர பந்து வீச்சில் துல்லியம் இல்லை. பந்து வீச்சு குறைபாடு தான் இந்தியாவுக்கு பாதிப்பை ஏற்படுத்தியது. சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட்டில் தொடர்ச்சியாக 13 ஆட்டங்களில் வெற்றி பெற்று சாதனை படைக்கும் அரிய வாய்ப்பும் நழுவிப்போனது.

இன்றைய ஆட்டத்திற்கு வேகப்பந்து வீச்சாளர்கள் அர்ஷ்தீப்சிங் அல்லது உம்ரான் மாலிக் ஆகியோரில் ஒருவரை சேர்ப்பது குறித்து அணி நிர்வாகம் பரிசீலிக்கலாம். மற்றபடி மாற்றம் இருக்காது. முந்தைய தோல்விக்கு பதிலடி கொடுக்கும் உத்வேகத்துடன் இந்திய வீரர்கள் ஆயத்தமாகிறார்கள்.

தென்ஆப்பிரிக்க அணியை பொறுத்தவரை, தொடக்க ஆட்டத்தில் கிடைத்த வெற்றியின் உற்சாகத்துடன் களம் காணுவார்கள். ஐ.பி.எல்.-ல் ரன்மழை பொழிந்த டேவிட் மில்லர், அதே வேட்கையுடன் இந்த தொடரிலும் மட்டையை சுழட்டுவது தென்ஆப்பிரிக்காவுக்கு கூடுதல் நம்பிக்கையை தந்துள்ளது. குயின்டான் டி காக், வான்டெர் டஸனும் நல்ல நிலையில் உள்ளனர். அதனால் இன்றைய ஆட்டத்திலும் அனல் பறக்கும் என்று நம்பலாம்.

மைதானம் எப்படி?

கட்டாக் மைதானத்தில் இதுவரை இரண்டு 20 ஓவர் போட்டிகள் நடந்துள்ளன. இதில் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் (2015-ம் ஆண்டு) தோல்வி அடைந்த இந்திய அணி இலங்கைக்கு எதிரான மற்றொரு ஆட்டத்தில் (2017-ம் ஆண்டு) வெற்றி பெற்றிருந்தது.

இந்த ஆடுகளம் கூடுமான வரைக்கும் பேட்டிங்குக்கு உகந்த வகையிலேயே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த நோக்கத்தில் தான் ஆடுகளத்தை பிட்ச் பராமரிப்பாளர்கள் தயாரித்துள்ளனர். ஆனால் கொஞ்சம் வேகம் குறைந்த ஆடுகளம் என்பதால் சுழற்பந்து வீச்சாளர்களும் தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்பு உண்டு. ‘டாஸ்’ ஜெயிக்கும் அணி 2-வது பேட்டிங்குக்கே முன்னுரிமை அளிக்கும்.

இரவு 7 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.

பண்டுக்கு புவனேஷ்வர்குமார் ஆதரவு

இந்திய வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர்குமார் நேற்று நிருபர்களிடம் கூறுகையில், ‘தொடக்க ஆடடத்தில் எங்களது பந்து வீச்சு சரியாக அமையவில்லை. அதனால் ரிஷப் பண்டுவின் கேப்டன்ஷிப் குறித்து கேள்வி எழுப்புகிறீர்கள். நாங்கள் சிறப்பாக பந்து வீசியிருந்தால் களத்தில் அவரது முடிவு எடுக்கும் திறனை பாராட்டி இருப்பீர்கள். கேப்டன்ஷிப்பில் அவர் நிச்சயம் சிறப்பாக செயல்படுவார். அடுத்த ஆட்டத்தில் நாங்கள் பந்து வீச்சில் வலுவாக மீண்டெழுவோம் என்று நம்புகிறேன்’ என்றார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.