பாஜக-வை அறிந்துகொள்ளுங்கள் என்ற நிகழ்ச்சியின் ஒருபகுதியாக, இங்கிலாந்து, நேபாளம், தாய்லாந்து உட்பட 13 நாடுகளைச் சேர்ந்த தூதரகத் தலைவர்களுடன், பா.ஜ.க தேசிய தலைவர் ஜே.பி.நட்டா டெல்லியிலுள்ள கட்சித் தலைமையகத்தில் நேற்று பேச்சுவார்தை நடத்தினார். இதில் பா.ஜ.க சார்பில், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் பா.ஜ.க-வின் வெளிநாட்டுப் பிரிவு பொறுப்பாளர் விஜய் சவுதைவாலே ஆகியோரும் கலந்துகொண்டனர். இந்த பேச்சுவார்த்தையின்போது, இந்தியாவில் சிறுபான்மையினர் மீதான கட்சியின் நடவடிக்கைகள் குறித்து கேள்வியெழுப்பப்பட்டது.
அதற்குப் பதிலளித்த நட்டா, “அனைத்து மதங்களையும் பா.ஜ.க மதிக்கிறது. மதத்தின் அடிப்படையில் மக்களிடையே பாகுபாடு காட்டுவதில் கட்சிக்கு நம்பிக்கை இல்லை. அனைவருக்கும் நீதி என்பதில் பா.ஜ.க உறுதியாக உள்ளது” என்று கூறினார்.
மேலும் தொடர்ந்த இந்த உரையாடலில், இந்தியாவில் பா.ஜ.க-வின் தேர்தல் வெற்றி ஏற்படுத்திய மாற்றங்கள் எத்தகையது என்று கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது பேசிய நட்டா, “பா.ஜ.க-வை பொறுத்தவரை வாக்கு வங்கி அரசியலில் நம்பிக்கையில்லை. அதுமட்டுமல்லாமல் கட்சிக்கு வாக்களிக்காதவர்களுக்கும் பொறுப்புக்கூற வேண்டும். மேலும், இந்திய அரசியலில், குடும்ப அரசியலானது செயல்திறன் அரசியலாக மாற்றம் கண்டுள்ளது” என்றார்.
ஏப்ரல் 6-ம் தொடங்கிய, பாஜக-வை அறிந்துகொள்ளுங்கள் எனும் நிகழ்ச்சியின் ஒருபகுதியாக இதுவரை 47 நாடுகளின் தூதர்களுடன் நட்டா உரையாடல் நடத்தியிருப்பதாகக் கூறப்படுகிறது.