புதுடெல்லி: புதிய தேசிய கல்விக் கொள்கையின் அடிப்படையில் நாடு முழுவதும் 15 ஆயிரம் பி.எம் ஸ்ரீ பள்ளிகள் ஏற்படுத்தப்படும் என்று ஒன்றிய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்தார். கடந்த சில நாட்களுக்கு முன் குஜராத்தில் அனைத்து மாநில பள்ளிக் கல்வி அமைச்சர்களின் 2 நாட்கள் தேசிய மாநாடு நடந்தது. அப்போது ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேசுகையில், ‘மாணவர்களை எதிர்காலத்துக்கு தயார்படுத்த, திறமையான எதிர்கால சந்ததியினரை உருவாக்குவதற்காக பி.எம்.ஸ்ரீ பள்ளிகளை தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த அதிநவீன பள்ளிகள் தேசிய கல்விக் கொள்கையின் ஆய்வகமாக செயல்படும். பி.எம் ஸ்ரீ பள்ளிகளை உருவாக்க அனைத்து மாநிலங்களும், யூனியன் பிரதேசங்களும், கல்வியாளர்களும் ஆக்கப்பூர்வமான ஆலோசனைகளை வழங்கலாம்’ என்று பேசினார். இந்நிலையில் ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் ஒடிசாவில் நடந்த நிகழ்ச்சியில் பேசுகையில், ‘புதிய தேசிய கல்விக் கொள்கையை (என்இபி) முன்னெடுத்துச் செல்லும் வகையில் பி.எம் ஸ்ரீ பள்ளிகள் உருவாக்கப்படும். இந்தியாவின் அறிவு சார்ந்த பொருளாதார வளர்ச்சிக்கு பள்ளிக் கல்விதான் அடித்தளம். அந்த வகையில் பி.எம்.ஸ்ரீ பள்ளிகள் முன்மாதிரியாக பள்ளிகளாக இருக்கும். இதற்காக, நாடு முழுவதும் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிடம் இருந்து ஆலோசனைகள் பெறப்பட்டு வருகின்றன. நாடு முழுவதும் 15 ஆயிரம் பி.எம் ஸ்ரீ பள்ளிகள் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது’ என்றார்.