திருமலை: திருமலையில் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் 30 மணி நேரம் காத்திருந்து ஏழுமலையானை தரிசித்து வருகின்றனர். திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்வதற்கு வாரவிடுமுறை அல்லது பண்டிகை கால விடுமுறை நாட்களில் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரிப்பது வழக்கம். தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் நாளை பள்ளிகள் திறக்கப்படுவதால் நேற்று முன்தினம் இரவு முதல் திருமலைக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்தது. இதனால் நேற்று காலை முதல் வைகுண்டம் காத்திருப்பு அறைகள் நிரம்பி தரிகொண்ட வெங்கமாம்பா அன்னதானக்கூடம் வரை சுமார் 4 கிலோ மீட்டர் தூரம் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். இவ்வாறு காத்திருக்கும் பக்தர்கள் சுமார் 30 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். இதையறிந்த தேவஸ்தான செயல் அதிகாரி தர்மாரெட்டி அதிகாரிகளுடன் சென்று பார்வையிட்டார். பின்னர் வரிசையில் காத்திருக்கும் பக்தர்களுக்கு தேவையான அன்னப்பிரசாதம், குடிநீர் விரைந்து வழங்க உத்தரவிட்டார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி : வழக்கமாக வைகுண்ட ஏகாதசி மற்றும் பிரம்மோற்சவ கருடசேவை உள்ளிட்ட நாட்களில்தான் பக்தர்கள் எண்ணிக்கை கட்டுக்கடங்காமல் இருக்கும். ஆனால் தற்போது கடந்த வாரத்தை போன்று இந்த வாரமும் திடீரென பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளது. இதனால் பக்தர்கள் 30 மணிநேரம் காத்திருந்து சுவாமியை தரிசிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே வெள்ளி, சனி, ஞாயிற்றுகிழமைகளில் முக்கிய பிரமுகர்களின் சிபாரிசு கடிதங்களுக்கு விஐபி. டிக்கெட் வழங்கப்படுவது ரத்து செய்யப்பட்டது. அதேபோன்று வாராந்திர சேவைகளான திங்கட்கிழமை நடைபெறும் விசேஷ பூஜை, செவ்வாய்க்கிழமை நடைபெறும் சகஸ்ர தீப அலங்கார சேவை, வியாழக்கிழமைகளில் நடக்கும் திருப்பாவடா சேவையும் ரத்து செய்யப்பட்டு அந்த நேரத்தில் கூடுதலாக இலவச தரிசனத்தில் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். தமிழகத்தில் பள்ளிகள் திறப்பால் கடைசி விடுமுறை நாளை முன்னிட்டு வழக்கத்தை விட அதிக அளவில் பக்தர்கள் வந்துள்ளனர் என கருதப்படுகிறது. இருப்பினும் பக்தர்களுக்கு தேவையான வசதிகள் செய்து தரப்படுகிறது. இவ்வாறு கூறினார்.இந்நிலையில் 2வது நாளாக இன்றும் சுமார் 30 மணிநேரம் காத்திருந்து பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.