புதுடெல்லி: ‘இந்தியா எப்போதும் உண்மை, அகிம்சை, சகோதரத்துவத்திற்கு முன்னுதாரணமாக உள்ளது. வெறுப்பும், அமைதியின்மையும் நமது பாதை அல்ல’ என ராகுல் காந்தி கூறி உள்ளார். முகமது நபி பற்றி பாஜ செய்தித் தொடர்பாளர் நுபுர் சர்மா தெரிவித்த சர்ச்சை கருத்தை கண்டித்து, நாடு முழுவதும் நேற்று முன்தினம் போராட்டம் வெடித்தது. உபி, ஜார்க்கண்ட், மேற்கு வங்கத்தில் பெரும் கலவரங்கள் வெடித்தன. இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி நேற்று தனது டிவிட்டர் பதிவில், ‘மகாத்மா காந்தியின் லட்சியங்களே சுதந்திர இந்தியாவின் அடித்தளமாகும். இந்தியா எப்போதும் உண்மை, அகிம்சை, சகோதரத்துவத்திற்கு முன்னுதாரணமாக திகழ்கிறது. வெறுப்பும், அமைதியின்மையும் நமது பாதை அல்ல. இந்தியாவை ஒன்றிணைப்பதும், பரஸ்பர நல்லுறவை பேணுவதும் நாட்டின் அனைத்து மக்களின் பொறுப்பாகும்,’ என வலியுறுத்தி உள்ளார்.